பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/358

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356 சேர மன்னர் வரலாறு



தோளாண்மையும் தாளாண்மையும் ஒருங்கு பெற்றுப் பகையொடுக்கி இனிய காவல் புரிந்து வந்த பிட்டனுடைய பெருவன்மையை நன்குணர்ந்த குட்டுவன் கோதை, அவனைத் தனக்குரிய அரசியற் சுற்றமாகக் கொண்டு அன்பு செய்தான். முடிவேந்த னான குட்டுவன் நட்பைப் பிட்டனும் பெரிதென எண்ணி வேண்டும் போதெல்லாம் பெருந்துணை புரிந்தான். பகையகத்துப் பெற்ற பெருஞ்செல்வத்தைப் பரிசிலர்க்கு ஈயும் பண்பு பண்டை நாளைச் செல்வர் பால் பிறவியிலேயே ஊறியிருந்தது. கொடைமடம் படுவதும் படைமடம் படாமையும் வெல்போர் வேந்தர்க்கு வீறுடைமையாகும். அவ்வழி வந்தவனாதலால் பிட்டங்கொற்றன் வரையாத வள்ளன்மை செய்தொழுகினான்.

அவனைக் குதிரைமலைக் கிழவனாகச் சான்றோர் கூறுவதால், அவன் குடநாட்டின் பண்டைத் தலைநகரமான நறவு என்னும் ஊரை விடுத்துக் குதிரை மலைக்கு அண்மையிலேயே ஓர் ஊரமைத்திருப்பான் எனக் கருதலாம் குதிரை மலைக்கு அண்மையில் சமால்பாத் என்னும் பெயருடைய ஊரொன்று இருக்கிறது. அங்கே பழையதொரு கோட்டையும் இருக்கிறது. அது திப்புசுல்தான் தன் தாயான சமால்பாயினுடைய பெயரால் அமைத்தது என்றும் அதன் பழம் பெயர் நரசிம்மங்காடி என்றும் அப் பகுதி பற்றிய வரலாறு[1] கூறுகிறது. அங்கு வாழ்பவர், அந் நகரம்


  1. Imp. Gazett. Madras. Vol. ii.