பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/366

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364 சேர மன்னர் வரலாறு



நாடனான பிட்டனும் அவனுக்கு இறைவனாரும் குட்டுவன் கோதையும் அவ்விருவரையும் மாறுபட்டெழும் பகை மன்னரும் நெடிது வாழ்க; பகை மன்னர் வாழ்வு எப்போதும் பரிசிலர்க்கு ஆக்கம்[1]” என்று பாடினர். இவ்வாறே பிறரும் பாடிய பின்பு, காரிக் கண்ணனார், “இவ்வுலகத்தில் ஈவோர் அரியர்; ஈவோருள் ஒருவனாய்ச் சிறக்கும் பிட்டன் நெடிது வாழ்க; அவனது நெடிய வாழ்வால் உலகர் இனிது வாழ்வர்[2]” என்று வாழ்த்தினர்.

தலைமகன் கடமை குறித்துத் தன் காதலியைப் பிரிந்து செல்ல வேண்டியவனானான். அவன் செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் ஆற்றாமல் கண் கலுழ்ந்து அவனை நோக்கினாள். அவன் தனித்திருந்து பிரிவுக்குரியன செய்யுங்கால் அவன் மனக்கண்ணில் காதலியின் கன்னிய கண்ணிணை நீர் நிறைந்து காட்சியளித்தது. அக்கட்பார்வையைக் கூறக் கருதிய மருதன் இளநாகனார்க்குப் பிட்டனுடைய வேற்படை நினைவுக்கு வந்தது. உடனே அவர் தலைமகன் கூற்றில் வைத்து, “வானவன் மறவன் வணங்குவில் தடக்கை, ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன், பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த திருத்திலை எஃகம் போல, அருந்துயர் தரும் இவள் பனிவார் கண்ணே[3]” என்று பாடினர். இவ்வாறே தலைவியது ஆற்றாமை கண்ட தோழி, தலைகனை யடைந்து, “தலைவ, சென்று வருவேன் என்று நீ சொன்ன சிறு சொல்லைக்


  1. புறம். 171.
  2. புறம். 171.
  3. அகம். 77.