பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/369

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் கணைக்கால் இரும்பொறை 367



சம்பந்தர் முதலியோர் இச்செங்கணான் செய்த திருப்பணியைப் பாரட்டிப் பாடியிருக்கின்றனர். திருமங்கையாழ்வாரும் அவன் சிவபெருமானுக்கு செய்த திருப்பணியை வியந்து “இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோன் ஈசற்கு எழில்மாடம் எழுபது[1]” செய்தான் என்று சிறப்பித்துப் பாடியிருக் கின்றனர்.

இச்சோழன் செங்கணானுக்கும் கணைக்காலிரும் பொறைக்கும் எவ்வகையாலோ பகைமையுண்டாயிற்று. செங்கணான் பெரும்படையொன்று கொண்டு பாண்டி நாடு கடந்து குட்டநாட்டுக் கழுமலம் என்னும் ஊரை வளைத்துக் கொண்டு போர் உடற்றினான். சேரமான் கணைக்காலிரும்பொறையும் கடும்போர் உடற்றினான். போர் நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் இரவு, இரும்பொறையின் பாசறையில் களிறொன்று மதங் கொண்டு, ஓய்ந்து உறங்கிக் கொண்டிருந்த சேரருடைய படைமறவர்க்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டது. அவர்களும் திடுக்கிட்டுச் செய்வகை அறியாது திகைப்புற்று அலமரத் தொடங்கினர். இச் செய்தி சேரமானுக்குத் தெரிந்ததும் அவன் சட்டெனப் போந்து மத களிற்றின் மத்தகத்திற் பாய்ந்து குத்தி அதனை அடக்கி வீறு கொண்டான். பின்னர் அனைவரும் “திரைதபு கடலின் இனிது கண்டுப்ப [2]” அமைத்தனர்.


  1. பெரிய திருமொழி: 6, 6, 8.
  2. சற்.18