பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/370

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368 சேர மன்னர் வரலாறு



இத்துணைப் பேராற்றல் படைத்த இரும்பொறை செங்கணானொடு செய்த போரில் வெற்றி பெறானாயினன்.

ஒரு களிறு மதம் பட்டமைக்குக் கையற்றுக் கலங்கிய சேரமான் படைஞர், மதகளிறு பலவற்றை ஒருங்கு அடக்கவல்ல மாண்புடையனான செங் கணானது படைக்கு எதிர் நிற்கமாட்டாரன்றோ ; அதனால் அவர்கள் சோழர் படைக்கு உடைந்து கெட்டனர். களிறும் தேரும் மாவுமாகிய பல்வகைப் படையும் வீழ்தொழிந்தன. சோழர் படையில் இருந்த மாவும் களிறும் உதைத்தலால் சேரர் தலைவர் ஏந்திய குடைகள் “ஆவுதை காளாம்பி போன்றன [1].” கடுங் காற்றால் அலைப்புண்ட போது காக்களில் வாழும் களிமயில்கள் வீற்று வீற்றோடுவது போலப் பல திசையிலும் கேள்வரைப் பிரிந்த மகளிர் புலம்பித் திரிந்தனர் [2]” குருதிப் புனல் பாய்ந்து நன்னீர் யாறுகள் பலவும் செந்நீர் யாறுகளாய் மாறின. முடிவில் செங்கணானும் சேரமானும் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தே நேர் நின்று பொருதனர். இரும் பொறையைச் சோழன் கைப்பற்றிக் கால்யாப்பிட்டுக் கொணர்ந்து குடவாயிற் கோட்டத்திற் சிறையிட்டு அரிய காவலும் அமைத்தான். திருப்போர்புறம் கேரள நாட்டில் இப்போது திருவார்ப்பென வழங்குகிறது.

சேர நாட்டுட் புகுந்து சேரமான் கணைக்கால் இரும்பொறையை வென்ற வெற்றி காரணமாக அவன்


  1. களவழி. 40.
  2. களவழி. 15.