பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/371

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் கணைக்கால் இரும்பொறை 369



அந் நாட்டில் முதற்கண் கைப்பற்றிய பகுதி செங்கணான் சேரி என்று பெயர் பெற்றது போலும். இப்போது அது செங்கணாசேரி என்ற வட்டத்தின் தலைநகராக விளங்குகிறது. பிற்காலத்தே முதல் இராசராசசோழன் சேரநாட்டு வள்ளுவ நாட்டிற்பெற்ற வெற்றி காரணமாக முட்டம் என்னும் ஊரின் பெயரை மாற்றி, மும்முடிச் சோழநல்லூர் எனத் தன் பெயரிட்ட செய்தியை[1]’ நோக்குமிடத்து, தான் வென்ற கழுமலத்துக்குச் செங்கணான் சேரியென்று தன் பெயரையே இட்டிருப்பான் என நினைத்தற்கு இடமுண்டு.

குட்ட நாட்டின் வடபகுதியில் குறும்பொறை நாடு வட்டத்திலுள்ள தொண்டி நகர்க்கண் பொய்கையார் என்றொரு நல்லிசைச் சான்றோர் வாழ்ந்தார். அவர் சேரமான்பால் பேரன்புடையர். இரும்பொறையைக் “கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல், தெறலருந்தானைப் பொறையன்[2]” என்று சிறப்பித்தப் பாடியுள்ளார். சேரமான், சோழன் செங்கணானுக்குத் தோற்றுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிலுள்ளான் என்பது பொய்கையார்க்குத் தெரிந்தது. அவர் மனம் எய்திய துன்பத்துக்கு எல்லை கிடையாது. பண்டு கரிகாலனோடு நிகழ்ந்த போரில் புறப்புண்பட்டதற்கு நாணி வடக்கிருந்து உயிர் துறந்த சேரலாதன் வழித்தோன்றலாதலால், சேரமான் கணைக்காலிரும் பொறை என்னாவனோ என அஞ்சி அலமந்தார்; மிக விரைந்து சோழ நாடு அடைந்து செங்கணானைக் கண்டார்.


  1. T.A.S. Vol. p. 292
  2. நற். 18.