பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/379

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிப்புரை 377



கரிகாலன் ஆட்சிபுரிந்து வந்தான் யாது பற்றியோ இருவர்க்கும் போர் மூண்டது. பெருஞ்சேரலாதனது பெருமை சோழன் கரிகாலன் முன் சிறுமையடைந்து விட்டது. அவன் எறிந்த வேல் பெருஞ்சேரலாதனது மார்பில் பாய்ந்து உருவி முதுகிற் புண் செய்துவிட்டது. சேரலாதன் உயிர்க்கு இறுதியுண்டாகவில்லை; ஆயினும், சேரலாதன் மானத்துக்கு அது பெரியதோர் இழுக் காயிற்று. போர் நிகழ்ந்த இடமாகிய வெண்ணி என்ற ஊரிலேயே அவன் வடக்கிருத்தல் என்ற நோன்பு மேற்கொண்டு உயிர் துறந்தான். அதனை அறிந்த கழாத்தலையார்,

“தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தனன், ஈங்கு
நாள்போற் கழியல் ஞாயிற்றுப் பகலே [1]

என்று பாடி வருந்தினர்; வெண்ணியென்னும் ஊரவரான குயத்தியார் என்ற புலவர் பெருமாட்டியார் பெரிதும் வியந்து பெண்மையால் மனங்குழைத்து,

“களவியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய்; நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே"[2]

என்று பாடினர்.


  1. புறம் 65
  2. புறம். 66.