பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/380

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378 சேர மன்னர் வரலாறு



இவ்வாறு இச் சேரமான் புறப்புண் நாணி வடக்கிருந்து உயர் துறந்த செய்தி சேர நாடு சென்று சேரவும், அந்நாட்டு மறச்சான்றோர் பலர் தாமும் அவன் போலவே உயிர் துறந்தனர் என ஆசிரியர் மாமூலனார் கூறுகின்றார்.

சேரமான் அந்தை: இவர் பெயர் எந்தை என்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. அந்தை என்பது இவரது இயற்பெயர். பண்டை நாளில் அந்தை ஆந்தை என்பன மக்கட் பெயர் வகையாக இருந்துள்ளன. கோட்டையூர் நல்லந்தையார் என்றொரு சான்றோர் சங்க நூல்களில் காணப்படுகின்றார். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் இவர் பாடிய பாட்டுகள் தொகை நூல்களில் உள்ளன.

புதுமணம் செய்து கொண்டு மனை வாழ்வில் இன்புற்றிருக்கும் செல்வக் காதலரிடையே கடமை காரணமாகக் காதலன் பிரிந்து செல்ல வேண்டியவனாகிறான். அவனது குறிப்பறிந்த காதலிக்கு அவன் பிரிவு வருத்தம் செய்கிறது. “நீர்வார் கண்ணாய், நீ இவண் ஒழிய யாரே பிரிகிற்பவரே[1] ? என்று தோழி தேற்றுகிறான். பின்பு ஒருவாறு அவளைத் தேற்றிவிட்டு அவன் சென்று விடுகிறான். சென்ற விடத்தே அக் கட்டிளங்காதலன் கண்ணெதிரே, கானம் தளிர்த்துப் பூத்து இனிய காட்சியால் அவன் உள்ளத்தை ஈர்க்கின்றது. தான் பெறும் இன்பத்தைத் தன் காதலியோடு உடனிருந்து நுகர்தற்


  1. குறுந்தொகை 22.