பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/381

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிப்புரை 379



கில்லாமையை நினைந்து அவன் வருந்துகிறான். அதனை எண்ணிய இச் சேரமானார்,

“காடணி கொண்ட காண்தகு பொழுதின்
நாம்பிரி புலம்பின் நலம்செலச் சாஅய்
நம்பிரிவு அறியா நலனொடு சிறந்த
நற்றோள் நெகிழ வருந்தினன் கொல்லோ”

எனக் கூறி வருந்துவதாகப் பாடி நல்லிசைச் சான்றோர் நிரலை எய்திவிடுகின்றார்.

சேரமான் முடக்கிடந்த நெடுஞ்சேரலாதன்: இச் சேரமானை முடம் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்றும் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்றும் ஏடுகள் குறிக்கின்றன. இதனால் இவன் முடக்கு நோயால் வருந்தினவன் என்பது புலனாகிறது. நோயின் நீங்கினாலன்றித் தெளிவான கருத்தமைந்த அகப்பாட்டு எழாமையால், இவன் முடக்கு நோயை வென்று உயர்ந்தமை தோன்ற நிற்கும் முடக்கு இடந்த நெடுஞ்சேரலாதன் என்ற பாடம் பொருத்தமாக மேற்கொள்ளப்பட்டது.

இச் சேரலாதன் வரலாறு ஒன்றும் தெரியவில்லையாயினும், இவன் சீரிய புலமைச் செல்வன் என்பது இவன் பாடிய அகநானூற்று நெய்தற் பாட்டு ஒன்றால் இனிது தெரிகின்றது. நற்பண்புகளெல்லாம் உருவாய் அமைந்த தலைவன் தன் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒத்த தலைவிபால் காதல் கொண்டான்; அவளுக்கும் அவன்பால் காதலுண்டாயிற்று. இவ்விருவரும் தம் உள்ளத்தே தோன்றிய காதலைக் களவு நெறியில் வளர்த்து முடிவில் கடிமணம் செய்து