பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/388

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386 சேர மன்னர் வரலாறு



இணர்களிலிருந்து கழன்று வீழும் புதுப் பூ கை விளக்குச் சுடர்வது போல ஒளிவிடும் என்றாயன்றோ! கோங்கு போன்ற நின்பால் தோன்றி முதுக்குறைவு முற்றிய நின் மகள் காதற்செவ்வி அலைத்தலால் தனது பிறந்த இல்லினின்றும் நீங்கித் தன் காதலுனுடன் சென்றது, யாவரும் புகழ்தற்குரிய சிறந்த கற்பொழுக்கமாயிற்று என்று இயம்பித் தாயைத் தேற்றினாள். இச் செய்தியை உய்த்துணருமாறு வைத்த இந்த இளங்குட்டுவனது புலமை நலத்தை நோக்கின், இச் சேரமான் நல்லரசு நடத்தி நல்லோர் பரவ வாழ்ந்த பெருந்தகை என்பது தெளிய விளங்குகிறது. தான் கூறுவதைக் கேட்போர் உள்ளத்தில் எழக்கூடிய கருத்துகளை, அந் நெறியிலே முன்னுணர்ந்து அவற்றுக்கு ஏற்ற சொற்களைத் தொடுப்பது ஒன்றே இதற்குப் போதிய சான்று பகர்கின்றது.

சேரமான் நம்பி குட்டுவன்: செல்கெழு குட்டுவன், வேல்கெழு குட்டுவன், செங்குட்டுவன், இளங்குட்டுவன் என்றாள் போல இச்சேரமான் நம்பி குட்டுவன் எனப்படுகின்றான். இவனும் இளங்குட்டுவன் போல ஏற்றமான புலமைச் சிறப்புடையன். இவன் பாடியனவாக நற்றிணை, குறுந்தொகை முதலிய தொகை நூல்களில் சில பாட்டுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவன் வரலாற்றை அறிதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லையாதலால் இக்குட்டுவனுடைய பாட்டுகளின் நலத்தை அறிவது இவனைப் பற்றி ஓரளவு அறிந்தவாறாகும்.