பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396 சேர மன்னர் வரலாறு


ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை;
இன்னும் வாழ்வல்! என் இதன் பண்பே”[1]

என்பது அப் பாட்டு. தன் உயிரை உண்ணமாட்டாமையால், மனைவி இறந்ததால் உண்டாகிய துயரத்தை இகழ்ந்து, “யாங்குப் பெரிதாயினும் நோய் அளவு எனைத்தே” என்பது அவனது கையறவை எத்துணை மிகுத்துக் காட்டுகிறது! எனக்கும் அவட்கும் உயிர் ஒன்று என்பது உண்மையானால், அவனது உயிர் நீங்கிய போதே எனது உயிரும் நீங்க வேண்டும்; நீங்கவில்லையே, உயிர் வாழ்கின்றேனே என்பானாய், “இன்னும் வாழ்வல்” என்று இகழ்ந்தான்.

இப் பெற்றியோன் சின்னாட்கெல்லாம் உடல் நலம் குன்றக் கோட்டம்பலத்தே இருந்து இறந்து போனான், வஞ்சி நகர்க்கண் அவன் உறைந்த பகுதி மாக்கோதை என்ற பெயர் எய்திற்று. அவனைப் பள்ளிப்படுத்த இடம் மாக்கோதைப் பள்ளி என வழங்குவதாயிற்று. பின் வந்தோர் அவனைப் புத்த சமயத்தவனாக்கி அதனைப் பௌத்தப் பள்ளி என மாற்றிக் கல்லில் பொறித்து விட்டனர்.[2]

இவ்வாறே, காவிரி நாட்டிலும் பிற சமயத்தவர்க் குரிய சிராப்பள்ளி குராப்பள்ளி என்பன சைவ சமயத்துக்கு உரியவாக மாறியது காணும் வரலாற்றறி ஞர்க்கு இது புதுமையாகத் தோன்றாது.

இம் மாக்கோதை வழியில் இறுதியாக இருந்தவர் பெருமாக்கோதையாராவர். இவர் காலத்தே வஞ்சிக்


  1. புறம். 245
  2. Ep. A.R. No.609 of 1912.