பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரர்கள் 73



(Goa) பகுதியும் அடங்கியிருந்தது. கோவா என்பது கூபகம் என்ற பழம்பெயரின் திரிபு. அப் பகுதியில் கடம்பர்களுடைய கல்வெட்டுகள் இப்போதும் காணப்படுகின்றன. அந் நாட்டில் வானியாறு என்றோர் ஆறும் ஓடுகிறது. அது கிழக்கில் நிற்கும் மலைமுகட்டில் தோன்றி மேற்கே ஓடிச் சில கால்வாய்களாய்ப் பிரிந்து மேலைக் கடலில் சென்று சேர்கிறது. இப்போது வட கன்னடம் மாவட்டத்தில் மேலைக்கடற்கரையிலுள்ள ஹோனவார் (Honawar) என்னும் மூதூர் அந்த ஆற்றின் ஒருகால் கடலொடு கலக்குமிடத்தே இருக்கிறது. அந்தக் காலும் ஹோனவாறென்ற பெயர் கொண்டு நிலவுகிறது. அதனுடைய பழம் பெயர் வானவாறு என அங்கே வாழும் முகமதிய முதுவர்கள் கூறுகின்றனர். மலை முகட்டில் தோன்றிக் கடலோடு கலக்குங்காறும் அதன் பெயர் வானியாறே தான்; இப்போது அந்த ஆறு கடல் சேர்ந்த பகுதியில் பல கால்களாய்ப் பிரியுங்காறும் சாராவதியென்ற பெயர் கொண்டிருக்கிறது. ஜோக் கென்னும் ஊரருகே[1] இந்தச் சாராவதி 850 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து மேலைக் கடல் நோக்கி ஓடுகிறது. தோற்றமுதல் முடிவுவரை வானியாறாக இருந்தது இடையில் சேரவாறு என்ற பெயர் பெற்று, பின்னர் அது திரிந்து சாராவதியாய் விட்டது.


  1. “தோகைக்காவின் துளுநாடு” (அகம். 15) என்ற விடத்துக் காணப்படும் தோகைக்கா என்பதே இப்பகுதிக்குப் பழம் பெயர். இது தோக்கா என மருவிப் பின்பு ஜோக் என்ற பெயருடன் இப்போது வழங்குகிறதென்பது அறிஞர்கள் காணவேண்டியதொன்று.