பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

திரு. துப்ரயில் முதல் திரு. பி.டி. சீனிவாச ஐயங்காரையுள்ளிட்ட பலரால் ஆராயப்பட்டுள்ளது. இடைக்காலப் பாண்டிய சோழர்கள் வரலாற்றைத் திரு. நீலகண்ட சாத்திரியார் ஒருவாறு ஆராய்ந்து எழுதினாராக, அவரது ஆராய்ச்சிக்கு எட்டாத பலவுண்மைகளைக் கண்டு தெளிவுபடுத்தித் திரு. டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் நல்லதொரு வரலாற்று நூலையும் எழுதியுதவியிருக்கின்றார்கள். விசயநகர வேந்தர் அவருக்குப்பின் வந்த நாயக்க மன்னர் ஆகியோரின் வரலாறுகளை டாக்டர் திரு. கிருஷ்ணசாமி ஐயங்காரையுள்ளிட்ட அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர்.

தமிழ் நாட்டின் வரலாறு காண முயன்றோருள் பெரும்பாலோர் பல்லவ சோழ பாண்டிய நாட்டு வரலாறுகளையே மேன்மேலும் ஆராய்ந்தனரே யன்றி, அதன் மேலைப்பகுதியாகிய சேர நாட்டு அரசர்கள் வரலாற்றைக் காண இவ்வாறு முயலவில்லை. இதற்குக் காரணம், இத்துறையில் முயன்றோர் பலரும் சேரநாடு இன்று கேரள நாடாக மாறிவிட்டது கண்டு மயங்கினமையே யாகும். திரு. கே.ஜி. சேஷையர் முதலிய அறிஞர் சிலரே அத்துறையில் கருத்தைச் செலுத்தினர்.

சங்க காலச் சேரர் இலக்கியங்களை யான் ஆராயத் தலைப்பட்டபோது, சேர நாட்டைப் பற்றிய குறிப்புகளைத் தேடித் தொகுக்கும் கடமை உண்டாயிற்று. அக் காலை, மேனாட்டறிஞரான வில்லியம் லோகன் எழுதியனவும், நம் நாட்டவரான திரு. நாகமையர், திரு. கே.பி. பதுமநாப மேனன், திரு. கே.ஜி. சேஷையர், திரு. சி. கோபாலன் நாயர் முதலியோர்