பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் 91



அதனால் மறம் வாடாத நிலையுண்டதால் வேண்டி உதியன் இச் செயலைச் செய்தான் இதனை நுணுகிக் கண்ட இளங்கீரனார் என்னும் சான்றோர், “உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பில், இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும், ஆம்பலங் குழல்”[1] என எடுத்து ஓதுகின்றார்.

உதியனது சேரநாடு கிழக்கில் கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. அப் பகுதியில் குழுமூர் என்பது ஓரூர்; இப்போது உடுமலைப்பேட்டை தாலூகாவில் அது குழுமம் என்ற பெயருடன் இருக்கிறது. ஒருகால் அப் பகுதியில் கடும் போர் உடற்றி வென்றி எய்திய உதியஞ் சேரல் தன்னோடு போர்க்களம் புகுந்து பகைவரொடு போருடற்றித் துறக்கம் பெற்ற சான்றோர் பொருட்டுப் பெருஞ்சோற்று விழாவொன்றைச் செய்தான்.[2] இதனைப் “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை[3] என்று தொல்காப்பியர் கூறுவதனால், இது தமிழ் மக்களிடையே தொன்றுதொட்டு வரும் மரபு என்பது தெளியப்படும். பாரதப் போர் நிகழ்ந்த காலத்தே சேரநாட்டு வேந்தரும் அதன் கட் கலந்து கொண்டனர். அதற்கு வியாசர் எழுதிய பாரதமே சான்று பகருகிறது. அப் போர் முடிவில் பாண்டவர்களையும் எஞ்சி நின்ற கெளரவர்களையும் ஒருங்கு கூட்டி அரும் போர் செய்து துறக்கம் எய்தியோர்க்காகப் பெருஞ்சோற்று விழா செய்தல் வேண்டும் என அப் போர்க்குச் சென்றிருந்த சேரவேந்தன் வற்புறுத்திப் “பெருஞ்சோற்று நிலை” யொன்றை நடத்தினான். அவன் வழிவந்தோனாதலால்,


  1. நற். 113.
  2. அகம். 168; 235.
  3. தொல். புறம். 8.