பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 சேர மன்னர் வரலாறு



உதியஞ்சேரல் குழுமூர்க்கண் பெருஞ்சோற்றுவிழா நிகழ்த்தியதை, வியந்து பாட வந்த முடிநாகனார் என்ற சான்றோர், இவனுடைய முன்னோன் செயலை இவன் மேலேற்றி,

“அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்[1]

என்று பாடினர் என்பர். இந்த முடிநாகனார், சேரநாட்டு ஊர்களுள் ஒன்றான முரஞ்சியூர் என்னும் ஊரினர்; இப்போது அது முரிஞ்யூர் என வழங்குகிறது; கொச்சி வேந்தர் குடும்பக் கிளைகளான மூத்ததாய் வழி , இளைய தாய்வழி முரிஞ்யூர்த் தாய்வழி, சாலியூர்த் தாய்வழி, பள்ளிவிருத்தித் தாய்வழி[2] எனப்படும் கிளைகளுள் முரிஞ்யூர்த் தாய்வழிக்குரிய ஊராக இருப்பது கருதத் தக்கது. இவ்வூரினரான முடிநாகனார்க்கு வேந்தர் குடிவரவு நன்கு தெரிந்திருத்தற்கு வாய்ப்புண்மையால், அவர் இதனை நினைத்து நம் உதியனை இவ்வாறு சிறப்பித்துப் பாடினார் என்பர்.

இப் பிண்ணடம் மேய பெருஞ் சோற்றுநிலை யென்னும் புறத்துறையை மேற்கொண்டு புலவர் பாடும் புகழுண்டாகச் செய்தோர் இவ் உதியஞ்சேரற்குப் பின் வந்தோருள் பிறர் எவரும் இல்லாமையால், பிற்காலச் சான்றோர் நம் உதியஞ்சேரலை, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்று சிறப்பித்துக் கூறுவாராயினர்.


  1. புறம் 2.
  2. K.P.P. Menon’s History of Kerala Vol.i. p.480.