பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சேற்றில் மனிதர்கள் அவனைத்தான் கொண்டு வரச் சொல்வார். "போன குறுவக்கி மாமன் சாவுன்னு போயிட்டீங்க. மழ நெருக்குதுன்னு நானே புதுர் எடுத்தே. மேனியே காணல." என்றார் சென்ற ஆண்டில். பழக்கப்பட்ட காலே வழுக்கும் வகையில் வானம் யாருக்காகவோ கண்ணிர் வடிப்பதுபோல் அவனுக்கு இன்று தோன்றுகிறது. தடியை ஊன்றிக்கொண்டு விரைகிறான். அம்மா பொட்டுக் கடலையும் வெங்காயமும் வைத்துத் துவையல் அரைத்திருந்தாள். சுடுசோறும், வறுத்த கருவாடும் துவையலுமாக வயிறு நிறைய உண்டுவிட்டு அவன் புறப்பட்டிருக்கிறான். - நிறைந்த வயிரும் வெளிக் குளிர்ச்சியும் அவனுக்கு மனம் நிரம்பிய உற்சாகத்தை ஊட்டவில்லை. இவ்வாறு மழைக்கார் குவிந்து பொழிவதும் பின்னர் சற்றே ஒய்ந்து மறுபடி ஒரு பாட்டம் கொட்டுவதுமாக இருக்கும் நாட்களில் கண்மாய் மடையில் துணியைக் கட்டிவைத்து மீன் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் செல்வான். வடிவுக்கு இப்போதெல்லாம் அந்த மாதிரியான ஆர்வங்களே பிறக்கவில்லை. கால் அவன் மனக் குழப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வயலுக்குள் நழுவ வழுக்குகிறது. பயிர் மிதிபடும்போது, பாம்பை மிதித்தாலும் ஏற்படாத குளிரோட்டத்தில் சிலிர்க்கிறது. தவளைகளின் ஒலியையும், நீர்பாயும் ஒசையையும் தவிர வேறு உயிர்ப்பே தெரியாத இருளில் அவன் நடந்தும் ஒடியும் போகிறான். இலுப்பை மர மேடு, பச்சை மரத்துக்குள் படபடவென்று சிறகை அடித்துக்கொள்ளும் பறவைகள். கால்வாய்; இருமருங்கிலும் தாழை செழித்த புதர்கள். குளத்தில் நீர் தெரியாமல் மைத்தட்டாக மூடிக் கிடக்கிறது. மேலே போட்டிருக்கும் சாக்குக் கொங்காட்டில் நீர்த்துளி விழுந்து கனமாகக் கனக்கிறது. ஐயனார் குளத்துக் கோயிலில் முன்பெல்லாம் ஒரு விளக்கு எரிவதுண்டு. இந்த எண்ணெய் விலையில் கோயிலுக்கு யார் விளக்கெரிப்பார்கள்? குதிரைவீரனுக்கும் ஐயனாருக்கும் பூசையும் விழாவும் கிடையாது. இப்போதைக்கு இந்த மேட்டில் இறந்தவர்களைப் புதைக்கும் பூசைதான் நடக்கிறது! ஒரு குடிசையில்கூட ஒளியின் உயிர்ப்பில்லை.