பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 199 இவன் போய் திண்ணை முழுவதும் இரட்டை விரிச்சாக்கால் போர்த்துக் கொண்டிருக்கும் வீட்டுப்படி ஏறுகிறான். "பஞ்சி. பஞ்சி..!" கைத்தடியால் தட்டுகிறான். திண்ணையிலிருக்கும் ஆட்டின் கழுத்துமணி அசைகிறது. நாய் செவியடித்து ஒசை எழுப்புகிறது. கதவைத்திறந்து சிம்னி விளக்கை உயர்த்தும் பஞ்சமிக்கும் ஒரே ஆச்சரியம்! "அண்ணே!. வாங்கண்ணே! அட மழல நனஞ்சிட்டா அவன் சாக்கை உதறித் திண்ணையில் போடுகிறான். "இன்னாருங்க!. அண்ணா வந்திருக்கு, அண்ன..!” சோலை திடுக்கிட்டாற்போல் எழுந்திருக்கிறான். "சட்டையெல்லாம் நனஞ்சிருக்கி...!" "இல்ல. மேல துண்டுதா. அதுங்கூட ரொம்ப இல்ல." விளக்கைப் பெரிதாக்கி வைத்துப் பாயை இழுத்துப் போட்டு "உக்காருங்க அண்ணே." என்று பஞ்சமி உபசரிக்கிறாள். வடிவு வேட்டிச் சுருட்டில் நனையாமல் வைத்திருக்கும் ஐயர் கடைச் சேவு பொட்டலத்தை எடுத்து வைக்கிறான். "என்னா, இந்நேரத்துல வந்திருக்கீங்க. பொளுதோட வாரதில்ல?” "பொழுதோட வாரணும்னுதா பாத்தே. நேரமாயிப் போச்சு...” - “மழ நல்லதுதா. பெய்யிற நாளுல ஊத்துனாத்தான பயிருக்கு நல்லது! உங்க பக்கம் என்னப்பு கோயில்ல திருட்டுப் போச்சாம், வீரபுத்திரனப் புடிச்சி அடச்சிருக்காங்களாம்!" "அந்த வவுத்தெரிச்சல ஏங் கேக்குறிய..? இவுங்க சாமி இந்த அக்கிரமத்தப் பாத்துக்கிட்டிருக்கிறதுதா எனக்குப் புரியல. நா இப்ப அதுவிசயமாத்தா வந்தது. இவனுவ அக்கிரமத்துக்கு நாம பேசாம இருந்திட்டே இருந்தா என்னக்கி விடிவுகாலம் வருது...” அவன் எதுவும் பேசாமல் இவன் முகத்தையே பார்க்கிறான். "இப்பதா பாத்திட்டு வாரே. இங்க எதுனாலும் சீக்கு செவாப்புன்னு மொட வந்தாகுளத்தில வுழுந்துதா சாவனும் போல இருக்க!...”