பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 71 மாட்டான். மடைதிறந்து வரும் பெருக்கில் எந்த அரணுக்கும் காவல் இல்லையெனில் அடித்துக்கொண்டு போய்விடும். இவள் கால்வாய் கடக்குமுன் அவளே சோற்றுத் துக்கை மூடிவைத்து விட்டு கை கழுவ வருகிறாள். வடிவு சற்று எட்ட நின்று பீடி புகைக்கிறான். அம்சுவின் முகம் எப்போதும்போல் பூரிப்பாக இல்லை. "ஏண்டி சோறு தின்னாச்சா?” "அது வீட்ல சோறொண்ணும் ஆக்கலியா நேத்து. நா நம்மூட்டுச் சோறு கொஞ்சம் வச்சுக் குடுத்தே." லட்சுமி எதுவும் பேசவில்லை. மீதியிருந்த சோற்றைக் கரைத்துக் குடித்துவிட்டு கால்வாயில் தூக்கைக் கழுவுகிறாள். மாலை நான்கு மணிக்குள் அந்தப் பங்கின் நடவு முடிந்துவிடுகிறது. வீட்டுப்பக்கம் வந்த பின்னரே கூலியைக் கனக்கிட்டுக் கொடுப்பாள். அம்சுவுக்குப் பசியாறவில்லை. சாதாரணமாக வயிறு நிரம்பவில்லையானால் முன்னதாகவே வீட்டுக்குச் சென்று ஏதேனும் இருக்கிறதாவென்று குடைவாள். ஒன்றுமில்லையெனில் பொழுதோடு உலையேற்றிவிடுவாள். இன்று தன் பங்குக்குக் காசை வாங்கிக்கொள்ள ஒடிவரவில்லை. கூடையில் வழியில் கிடைக்கும் கள்ளி, மட்டை என்று பொறுக்கிப் போட்டுக் கொண்டு நாயக்கர் வீட்டுக்குப் போகிறாள். தாழம் புதர்கள் செறிந்த காவாய்க்கரை. இனி நோன்புக்காலத்தில் குப்பென்று மணம் கமழும் குலைகளை வடிவு பறித்தெடுப்பான். பாம்பைப்பற்றி அவனுக்கு அச்சமில்லை. வாலைப்பற்றி லாவகமாகக் கரகரவென்று சுழற்றி அடிப்பான். அம்சுவுக்கு அவனை அப்போது காண்கையில் உடல் சிலிர்க்கும். வயற்காட்டில் அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வடிவு இணைந்த தோழன். அவன் பள்ளியில் படித்த நாட்கள் அவளுக்கு நினைவில்லை. ஏர்கட்டி உழுவான். மடைச்சீர்நோக்கி, நாற்றுப் பறித்து, அரிகொய்து, அடித்து, வைக்கோல் பிரித்து, எல்லாப் பணிகளிலும் அவன் இருக்கிறான். சட்டை போட்டுக்கொண்டு அவன் டவுனுக்குச் செல்லும் கோலம் மனதில் நிலைப்பதில்லை. வானை நோக்கி யாரோ பூவிதழ்களை வீசினாற்போன்று உடை மரத்திலிருந்து கும்பலாகக் குருவிகள் பறந்துசெல்கின்றன. தெற்குத் தெருவின் பெரிய பெரிய பாழடைந்த கொட்டில் களும் குட்டிச்சுவர்களும் ஒருகாலத்தில் பண்ணைவீடுகளின்