பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சேற்றில் மனிதர்கள் அம்சு தலை நிமிரவில்லை. "ஏற்கனவே உங்கக்கா ஆளமதிக்கமாட்டா, உடயார் வீட்டுல மக பெத்து தொட்டில்ல போட்டாங்க, கூப்பிட்டனுப்பி னாங்கன்னு போனே, இவ வந்திருந்தா. திரும்பி எங்கூடத்தா வண்டில வந்தா. அடுப்பு இடிஞ்சி கெடக்கு. குளத்துமண்ணு கெடக்கு ஒருகூட அள்ளிட்டு வாடி மம்முட்டிய எடுத்திட்டுப் போயின்னேன். நாளக்கி வந்து தாரேன். இப்ப நேரமாச்சின்னு போனா, போனவதா. ஒங்கிட்ட சொல்லலான்னா நீ காலில கஞ்சிய வடிச்சிட்டு வருவ. மக்யா நா உங்கம்மா வந்து மண்ணுரெண்டுகட போட்டிட்டுப்போனா. அவ்வளவு கருவம், கவுரெத இப்பவே காலேஜிலப் படிக்கப் போட்டுட்டு எங்கேந்து புருசன் தேடறது? ஏரோட்டுற பயலே மோதிரம், வாட்சுன்னு கேக்கறான். சாமான்லாம் உச்சிக்குப் போயிருக்கு. இதில என்ன எடுப்பு காலேசி, கையேசின்னு?” தொட்டி நிரம்பியாயிற்று. 'போய் வரட்டுமா” என்ற பாவனையில் நிற்கிறாள். "உன் தாத்தா மாமன் லாம் இந்த வீட்டு உப்பைத் தின்னவங்கதா. இப்ப சங்கம் அது இதுன்னு பவராயிட்டான் உங்கப்பன். கள்ளுக்குக் காசில்லன்னு உங்க தாத்தா தலயச் சொறிஞ்சிட்டு நிப்பான். ஒருத்தன் எட்டிப்பார்க்கிறதில்ல. நானும் ஒரு முருங்கப்போத்துக் கொண்டாந்து இப்பிடி நட்டுவைக்கச் சொல்லுன்னு எத்தினி நாளா சொல்லிருக்கிறேன். தேஞ்சா பூடுவானுவ? விசுவாசமே இல்லாம பூட்டுது? எங்கையால்லாம் இல்லாம நீங்க இன்னிக்கி இப்பிடித் தலையெடுத்திருப்பீங்களா?" இது ஒரு பெரிய தொணதொணப்பு. கத்திரித்துக் கொண்டுவர முடியாமல் தேனிக்குளவிபோல் கொட்டும். அம்சுவுக்கு நேரமாகி இருட்டிவிட்டால் குளிக்கமுடியாது. சேலை நனைந்துவிட்டது. ஒரு வழியாகக் கத்திரித்துக்கொண்டு குளத்துக்கு வருகிறாள். கூடையைக் கரையில் வைத்துவிட்டுச் சேலையை ஒரு பகுதியை மாராப்பாகச் சுற்றிக்கொண்டு மற்ற ஆடைகளைக் கசக்குகிறாள். மேற்கே வானில் செம்மை பரவி, கீழ்த்திசையில் செறிந்த கருமையுடன் முத்தமிடுகிறது. குளத்தில் அமிழ்ந்து அந்த நீர்ச்சுகத்தில் ஆழ்ந்து போகிறாள்.