பக்கம்:சைவமும் தமிழும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விழைகின்றேன். உன் கடிதம் கண்டு மகிழ்ந்தேன். சைவ சமயத் தத்துவங்களின்மீது உன் நாட்டம் செல்வதாகவும், அவற்றைத் தெளிவாக விளக்கு மாறும் கேட்டிருந்தாய். உன் நல்லெண்ணத்தைப் பாராட்டுகின்றேன். முன்னைய நல்வினைப் பயன் காரண மாக உன் மனம் சமய தத்துவங்களில் ஈடுபட விழை கின்றது என்பது என் கருத்து. - - முதலில் சைவ சிந்தாந்தப் பொருளைத் தொகை முறையில் உணர்தல் நலமாகும். சித்தாந்தம் என்பது என்ன? முடிந்த முடிபு’ என்பது இதன் பொருளாகும். எந்த ஒரு பொருளைப்பற்றியும் முதற்கண் ஒரு முடிவு கொள்ளப்படுதல் இயல்பாக அமைவது; பின்பு அப் பொருளை நன்கு ஆராய்ந்து பார்த்து இறுதியாக ஒரு முடிவு கொள்ளப்படும். இதுவே முடிந்த முடிபாகும். சில சமயம் முதல் முடிவே முடிந்த முடியாகவும் வரலாம்; ஆயினும் அஃது ஆராயாமல் கொள்ளப்பட்ட நிலைபோல இல்லாமல், நிலைத்து நிற்கும் முடிபாகித் திகழுமாகை யால், அதுவே முடிந்த முடிபு’ என்று வழங்கப்பெறும். சைவ சித்தாந்தத்தில் முடிந்த முடிபாக கொள்ளப் படும் பொருள்கள் மூன்று. இவை பதி, பசு, பாசம் என்று வழங்கப்பெறும். இவற்றுள் பதி என்பது, இறைவன்; கடவுள். "பரமான்மா” எனப்படுவதும் இதுவேயாகும். பசு என்பது, ஆன்மா உயிர். 'சீவான்மா' எனப்படுவதும் இதுவே. பாசம் என்பது, தளை, அஃதாவது உயிரைப்