பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம்

சைவ இலக்கிய வரலாறு

1. தமிழ் நாட்டு வரலாறு

(கி. பி. 700-1000)

சைவ இலக்கியங்கள் என்னும் போதே தமிழறிஞர்களுக்குச் சைவத் திருமுறைகளே முதற்கண் நினைவில் எழும். இச்சைவத் திருமுறைகளின் வரலாற்றைக் காண்பதற்கு முன், அவை தோன்றிய கால நிலையும் மக்கள் நிலையும் அரசியல் பொருளாதார நிலையும் முன்னணியாக அறிவது இன்றியமையாததாகும். தமிழ்நாட்டு வரலாற்றில் சைவத் திருமுறை தோன்றிய காலம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்னதென்பது யாவரும் பொதுவாக அறிந்த உண்மை. அப்போது இருந்த அரசியல் வரலாற்று நிலையினை முதற்கண் காண்பதற்குத் தமிழகத்தின் பொதுநிலையறிவு வேண்டப்படும்.

தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும், தென்னெல்லை தென்குமரியென்றும் வழங்கும்.[1] வேங்கடமலை சித்தூர் மாவட்டத்தின் வடவெல்லையாய் நின்று பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற்கெல்லையாகி[2] வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத்தொடராகும். வட பெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டை நாடு என்றும் தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி நடு நாடு என்றும், வடவெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்கருகிலோடும் தென்வெள்ளாற்றுக்கும்


  1. தொல். பாயிரம்.
  2. செந். செல்வி. Vol. XXII, பக். 274.