பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

103

ளத்தே அவர்பால் பெருமதிப்பும் வழிபடற்கு அமைந்த பேரன்பும் தோற்றுவித்து விளங்கிற்று. அந்நாளில் பாண்டிநாட்டு மதுரை நகரில் பாண்டியன் மாதேவியாய் விளங்கிய மங்கையர்க்கரசியாரின் பெருமாண்பு மிக்க புகழெய்திற்று. ஞானசம்பந்தரை நினேக்கும்போதெல்லாம் அவர்பால் தாய்மையன்பு கொண்டு ஒழுகிய மங்கையர்க்கரசியின் திருப்பெயர் நினைவுக்கு வருவது இயல்பு. இவ்வியல்புபற்றி இடைக்காலத்துப்பெருமக்கள் திருஞான சம்பந்தருக்குக் கோயில் எடுத்தபோது அக்கோயிலில் மங்கையர்க்கரசியார் படிமத்தை எழுந்தருள்வித்து வழிபாடு செய்துள்ளனர்.சீகாழியிலுள்ள திருஞானசம்பந்தர்கோயிலில் மங்கையர்க்கரசியாரை எழுந்தருள்வித்து ஞானசம்பந்தருடைய பெற்றோருக்கில்லாத பெருஞ்சிறப்பினைச் செய்துள்ளனர்.[1] மேலும் மங்கையர்க்கரசியாரது மாண்பு கண்ட முன்னாளைச் செல்வர்கள், தங்கள் பெண்மக்கட்கும் மங்கையர்க்கரசியென்று பெயரிட்டு வழங்கியிருக்கின்றனர். இத்தகைய மங்கையர்க்கரசியர் பலர் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றனர். திருக்கோட்டியூரில் மங்கையர்க்கரசி யென்னும் பெயரையுடைய கண்ட நாச்சி யென்பவர், அவ்வூரிலுள்ள சிவன் கோயிலில் திருஞானசம்பந்தர் திருவுருவமொன்றை எழுந்தருள்வித்து வழிபாட்டுக்கென நிலம் விட்டிருக்கின்ற செய்தியை அக்கோயிற் கல்வெட்டொன்று கூறுகிறது. இவ்வாறே, ஒரு மங்கையர்கரசி, திருவண்ணாமலக் கோயிலில் மங்கையர்க்கரசி மண்டபம் என ஒரு கல்மண்டபம் எடுத்திருக்கின்றாள்."[2]

திருஞானசம்பந்தரைத் தமிழ்நாடெங்கும் ஊர்தோறும் உள்ள சிவன் கோயில்களில் எழுந்தருள்வித்து வழிபாடு செய்யும் வழக்கம் இடைக்காலத்திலே தோன்றி நிலவுவதாயிற்று. பலவூர்களில் திருஞானசம்பந்தருக்குத் தனியே கோயில் அமைத்து நாள்வழிபாடும் விழாவும் கடத்தி வந்துள்ளனர். பாண்டி நாட்டுத் தென்காசியிலுள்ள சிவன்


  1. I. A. R. No. 375 of I.
  2. 3, S. I.'I. Vol. VIII. ]