பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

111

பாடும் வழக்காறு வந்து விட்டது. அதனால் அவர், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, மாலைமாற்று, கோமுத்திரிகை, சக்கரமாற்று முதலியன பாடியுள்ளனர். பழமையாக வரும் இசைத் தமிழ் நெறியில் பல வேறுபாட்டுக்களைப் பாடிய திருஞானசம்பந்தர், புதுவதாகப் புகுந்த மிறைக்கவி (சித்திர கவி) நெறியையும் மேற்கொண்டமை, அக்காலத்தே வாழ்ந்த புதுமைப்பித்தர்களைத் தம்மொடு தழுவிக்கொண்டு சென்ற அவரது தகைமையை நாம் தெளியக் காட்டுகின்றது. நாளும் வளர்ந்து வரும் மக்கள் உள்ளம் எவ்வெப்புதுமை நெறிகளை விரும்பி மேற்கொள்கிறதோ அவ்வந் நெறிகளைத் தேர்ந்து மேற்கொள்ளாது ஒழியுமாயின், அவ்வுள்ளத்தைச் சமய நல்லொழுக்கத்தை மேற் கொள்ளுமாறு செய்யும் சமயப்பணி வெற்றி பெறாது என்பது உலகில் தோன்றி நின்று மறைந்த பழம்பெருஞ் சமயங்களின் வரலாறு காட்டும் உண்மை. இவ்வுண்மை நெறி திருஞானசம்பந்தர் நாளும் இன்னிசையால் வளர்த்த தமிழ்த் தொகையுள் ஒளிவிட்டுத் திகழ்வதை அறிஞர் கண்டு இன்புறுவார்களாக.