பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

113

புகழ் கொண்டார்.” இச் செய்தியை அறிந்ததும், திலகவதியார், தான் மணஞ் செய்யப் பெறாராயினும், தன்னை மணம் பேசப் பெற்றவர்க்கு உரிமை செய்து விட்டாராதலால், தன் தாயைப் போலத் தானும் உடனுயிர் துறக்கக் கருதினார். பற்றுக் கோடாகிய தாய் தந்தையரைப் பிரிந்து மனம் சோர்ந்திருந்த மருணீக்கியார்க்குத் தந்தையும் தாயும் போல வேண்டுவன புரிந்து அன்புறப் பேணிவரும் அருமைத் தமக்கையார் கருத்து, அவரது உள்ளத்தே பெருந்துயரை விளைவித்தது. உடனே, அவர் தமக்கையார் திருவடியில் வீழ்ந்து வணங்கித் தம்பொருட்டு உயிர்தாங்கியருளல் வேண்டுமென இறைஞ்சினர். “தம்பியார் உளராக வேண்டும்”[1] என்ற சீரருள் திலகவதியார் உள்ளத்தே பிறந்தது. அவ்வாறே, அவர், மருணீக்கியாகிய தன் தம்பியின் பொருட்டு உயிர் வாழ்வாராயினர். திருநாவுக்கரசரான பின், தன் பொருட்டு உயிர் வாழ்தற்கு ஒருப்பட்ட தன் தமக்கையின் அருள்நலத்தைப் பின்பொருகால் நினைவுகூர்ந்து, தான் பாடிய திருப்பதிகமொன்றில், “அம்மை யார் எனக்கு என்று என்று அரற்றினேற்கு, அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே[2]” எனக் குறித்துரைத்துள்ளார்.

மருணீக்கியார், பெற்றோரையும் உற்றோரையும் இழந்த துன்பத்தினின்றும், ஒருவாறு தேறி, நிலையாமையுணர்வு மீதூரப்பெற்றுச் சமய நூல்களைப் பயிலத் தொடங்கினர். நிலையாமையைப் பலபடியாலும் எடுத்தோதிச் சிறப்பிக்கும் வகையில், சமண் சமயம், அவருள்ளத்தைப் பெரிதும் மகிழ்வித்தது. சமண் நூல்கள் பலவற்றைப் பயின்றார். தமக்கையாரைப் பிரிந்து சென்று சமண் பள்ளிகளை அடைந்து தாமும் சமணரானர். அச்சமயத்தவர் உறைந்த பல இடங்கட்கும் சென்று பழுத்த சமண நூற் புலவராகித் தருமசேனர் என்னும் சிறப்புப்பெற்றுத் திகழ்வாராயினர்.

தம்பியார் தன்னைக் கைவிட்டுத் தமக்குரிய சிவநெறி


  1. திருநா. 121 : 6.
  2. பெரியபு. திருநா. 34.

SIV–8