பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

சைவ இலக்கிய வரலாறு

பாதிரிப்புலியூர் இறைவனைப் பரவி விட்டுத் திருவதிகை வந்து சேர்ந்தார்.


சமணர் செய்த இடுக்கண்களிலிருந்து இனிது உய்ந்து உயர்ந்த திருநாவுக்கரசர்க்கு இறைவன் திருவருள் புரிந்த நலத்தை அறிந்தான் பல்லவமன்னன்; தானும் சைவன் ஆனான். திருப்பாதிரிப்புலியூரிலிருந்த சமண்பாழிகளை இடித்துத் தகர்த்து நாவரசர் இருந்த திருவதிகையில் குணபரன் என்ற தன் பெயரால் குணபரேச்சுரம் என்னும் கோயில் ஒன்றைப் புதிதாகக் கட்டினான்[1]. அது குணதரேச்சுரம் எனவும் வழங்கும். குணபரன் என்பது முதன் மகேந்திரவன்மனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. அவனே தான் சைவனான திறத்தை அவன் காலத்தே திருச்சிராப்பள்ளியில் ஏற்பட்ட கல்வெட்டொன்றில்[2] குறித்திருக்கின்றான்.

பின்பு, நாவரசர், சிவபெருமான் எழுந்தருளும் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அப்பெருமானைப் பாடிப் பரவும் வேட்கையுற்றுத் திருவெண்ணெய் நல்லூர் திருக்கோவலூர் முதலிய திருப்பதிகட்குச் சென்று, திருத்தூங்கானைமாடம் என்னும் திருக்கோயில் உள்ள பெண்ணாகடம் அடைந்தார். அங்கே இறைவனை வணங்கித் தனக்கு மூவிலைச் சூலக்குறியும் இடபக்குறியும் பொறித்துத் தனது உடம்பைத் தூய்மை செய்யவேண்டுமென[3] வேண்டிக் கொண்டார். இறைவன் அருளால் அவர்க்கு அவர் விழைந்தவாறே சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப்பட்டன.

பெண்ணாகடத்தில் சின்னாள் தங்கியிருந்து அரிதிற். பிரிந்துபோந்த நாவுக்கரசர், தில்லைப்பேரம்பலம் அடைந்து பன்னாள் தங்கி, “தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலக்கூத்தனை”[4] வணங்கியும் வாழ்த்தியும் திருப்பதிகங்கள் பல பாடியும் வழிபட்டுக்கொண்டிருந்தார். அந்நாளில் சீர்காழிப்பதியில் திருஞானசம்பந்தர் தோன்றி ஞானப்பாலுண்டு சிவஞானச் செல்வராய்த் திகழ்வது


  1. பெரியபு: திருநா. 146.
  2. S. I. I. Vol. I. No. 33.
  3. திருநா. 110 : 1, 10.
  4. திருநா. 116 : 8.