பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர் , 121

பின் நாவரசர், தென்னாடுசைவ நாடானது கேட்ட மகிழ்ச்சியால் தாமும் அங்குச் சென்று அந்நாட்டுப் பதிபலவும் கண்டு பரவ விரும்பிப் புறப்பட்டுச் சென்றார், மதுரையில் நெடுமாறனும் மங்கையர்க்கரசியாரும், குலச் சிறையாரும் செய்த சிறப்புக் கண்டு பேருவகையுற்றுத் தென்னாட்டுப் பதி பலவும் கண்டு கொண்டு திரும்பப் பொன்னி நாடு வந்து சேர்ந்தார். முடிவில் அவர் திருப்புகலூரை யடைந்து உழவாரப் பணியும் திருப்பதிகப் பணியும் புரிந்து வந்தார். அங்கே சோதனைகள் பல நிகழ்ந்தன. அவற்றை 'யெல்லாம் வென்று சிறந்த திருநாவுக்கரசர் சித்திரைத் திங்கள் சதயத் திருநாளில் "சிவானந்த ஞானவடிவேயாகி"1 இறைவன் திருவடிக் கீழ்ச் சென்று சேர்ந்தார்.

பிற நூற் குறிப்பு *

திருநாவுக்கரசரது வரலாற்றை அறிதற்குச் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் சிறந்து நிற்கிறது. அவர்க்கு முன்தோன்றி விளங்கிய நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி, திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை என்பனவும் இவர் வரலாற்றுக் குறிப்புக்களுட் சிலவற்றைத் தம் மகத்தே கொண்டுள்ளன. இவற்றுள் திருத்தொண்டத் தொகை, "திருநின்ற செம்மையே செம்மையாக்கொண்ட திருநாவுக்கரையன்"2 என்று குறிப்பதனோடு அமைகின்றது. திருத்தொண்டர் திருவந்தாதி, திருநாவுக்கரசர் திருவாமூரையுடையவர்: திருவதிகை வீரட்டரால் ஆட் கொள்ளப்பட்டவர். பகைவர் விடங்கலந்தளித்த அமுதை யுண்டவர்; திருநல்லூரில் சிவபெருமானால் சென்னியில் திருவடிசூட்டப்பெற்றவர்'3என்றும், "அவருடைய திருப் பதிகங்கள் திருமறைக்காட்டில் மறைக் கதவுகளைத் திறந்தன ; அவர் கல்லொடு பிணித்துக் கடலில் தள்ளப்பட்ட போது, அக்கல்லைப் புணையாகக் கடலில் மிதப்பித்தன 4. ______________________________ 1. பெரியபு. திருநாவுக். 427, 2. சுந்த. தே. 39 : 4. 3. திருத்தொண். திருவந். 24. 4. திருத்தொண். திருவந். 25.