பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 சைவ இலக்கிய வரலாறு

இடித்துத் தகர்த்துக் கொண்டு சென்று குணபரேச்சரத் தைக் கட்டியதற்குக் காரணமாகும்.

இனி திருநாவுக்கரசர் சைவராகிய போது மிக்க முதுமை யுற்றிருந்தார் எனத் திருத்தொண்டர் வரலாற்றுக் குறிப்பு 1ஒன்றால் தெளிவாகத் தெரிகிறது. அவர் சமணரான காலத்தில் வேற்றுச்சமய உண்மைகளை அறிதற்கண் வேட்கை எழுதற்குரிய அத்துணைப் பரந்த கல்வி கேள்விகளையுடை யராயிருந்தமையின், அப்போது அவர்க்குக் குறைந்தது இருபத்தைந்து வயதேனும் இருத்தல் வேண்டும். அவர் சைவரானபோது, முதுமையும் அது காரணமாக உடலிற் பிறக்கும் அசைவும் அவர்பால் காணப்பட்டமையின் அவர்க்கு அப்போது வயது ஐம்பதுக்குக் குறையாமலும் அறுபதுக்கு மிகாமலும் இருக்கும். ஆகவே, அவர் சமண், சமயத்தில் குறைந்த அளவு இருபத்தைந்தாண்டேனும் இருந்திருப்பர் எனக் கருதலாம். இவ்வகையால், திருநாவுக்கரசர் திருவாமூரில் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார் என்பது தெளிவு. . .

முதன் மகேந்திரவன்மன் சைவனானபின்,சிவன்கோயில் கள் பல கட்டியிருப்பது2 காண்கின்றோம். இவற்றைக் கட்டுதற்குப் பத்தாண்டுகள் வைப்போமாயின், அவன் கி.பி. 620 அளவில் சிவநெறி சேர்ந்தான் எனல் அமையும். அப்போது நாவரசரது வயதைக் குறைந்தது ஐம்பதாகக் கொண்டாலும் அவர், கி. பி. 570 அளவில் பிறந்தார் என்பது பெறப்படும். ஆகவே, திருநாவுக்கரசர், கி. பி. 570 அளவில் திருவாமூரில் புகழனார்க்கும் மாதினியாருக் கும் மகனாகத்தோன்றி, எண்பத்தோரியாண்டு மண்ணுல கில் வாழ்ந்திருந்து, கி. பி. 650-1 அளவில் சித்திரைத் திங்கள் சதய நாளில் திருப்புகலூரில் இறைவன் திருவடி நீழல் எய்தினார் என அறிகின்றோம். ______________________________ 1. திருத்தொண் : திருஞான

  புரா. 270.

2. வல்லம் (செங், ஜில்லா), மகேந்திரவாடி (வ, ஆ.) தளவானூர் (தெ. ஆ.), சீயமங்கலம், பல்லாவரம் முதலிய இடங்களிலுள்ள கோயில்கள் முதல் மகேந்திரவன்மனால் கட்டப்பட்டவை-