பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

127

கலந்த பாற்சோற்றை உண்பித்ததும்[1] களிறொன்றை அவர் மேல் ஏவிக் கொலை செய்ய முயன்றதும், திருநாவுக்கரசர் கல்புணையாகக் கடலில் மிதந்து போந்து கரையேறியதும்[2] பெண்ணிகடத்தில் சூலக்குறியும் இடபக் குறியும் பெற்றதும்,[3] திருநல்லூரில் சென்னியில் சிவபெருமானால் திருவடி சூட்டப்பெற்றதும்,[4] திங்களுர் அப்பூதி மகன் அரவு கடித்து இறந்தானை உயிர்ப்பித்து அப்பூதியைத் திருப்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்ததும்,[5] திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும்,[6] திருமறைக்காட்டில் கதவம் திறந்ததும், திருவாய்மூரில் சிவதரிசனம் பெற்றதும், பழையாறையில் உண்ணா நோன்பிருந்து மறைக்கப்பட்டிருந்த சிவபெருமானால் வெளிப்பட விளங்கச்செய்ததும், திருப்பைஞ்ஞீலியருகில் பொதிசோறு பெற்றதும், திருவையாற்றில் கயிலைக் காட்சி பெற்றதும் பிறவும் சிவம் பெருக்கும் சிறப்புடைச் செயல்களாகக் குறிக்கப்படுகின்றன. இவற்றைத் திருநாவுக்கரசர் தாமே வெளிப்படையாகவும் குறிப்பாகவும் ஆங்காங்கே தாம் பாடிய திருப்பதிகங்களில் குறித்திருக்கின்றார், இஃது இவரது வரலாற்றின் வாய்மையை[7] நன்கு வற்புறுத்துகிறது.

திருநாவுக்கரசர் தம்முடைய வாழ்நாளிற் பெரும்பகுதியைச் சமண்சமயத்தில் கழித்திருக்கின்றார், அதனால் அவரது சமண்சமய வாழ்வு சேக்கிழாரால் திருத்தொண்டர் புராணத்துட் கூறப்படவில்லை. வரலாறு கண்டு செல்லும் நமக்கு அதனை அறிவதும் உரிமையாகிறது. அதனை அறி-


  1. வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர்தந்த, நஞ்சமுதாக்குவித்தார் —70:5.
  2. “கல்லினோடெனைப் பூட்டி யமண்கையர்,
    ஒல்லே நீர்புக நூக்க என் வாக்கினல்,
    நெல்லு நீள்வயல் நீலக்குடியான்,

    நல்ல நாமம் நவிற்றியுய்ந்தேனரோ”—186:7
  3. 110: 1, 10.
  4. 228 : 1.
  5. 12 : 10.
  6. 164:7 இவ்வாறே ஒவ்வொருசெய்திக்கும் அகச் சான்றுகள் இவர் பாடிய திருப்பதிகங்களில் காணக் கிடக்கின்றன.
  7. “வாய்மை திகழ் பெருநாமச் சீர் பரவலுறுகின்றேன்”—சேக்கிழார். பெரியபு. திருநா. 1.