பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

129

உண்மையாகவே தோன்றின. சமண்வாழ்வில் அவருடைய குலத்துக்கும் வளத்துக்கும் குறைவுண்டாகவில்லை. அந்நாளில் நிலவிய சமண் சான்றோரிடையே தமிழறிவு மிகுதியும்பரவவில்லை. அவர்களது கூட்டத்திடையே இருந்ததனால், தமிழ்நெறியாகிய சிவநெறி அவர்க்கு விளங்காதாயிற்று. ஒருகால் அந்நெறியைக் கண்டாலும், சமணரது சூழ்நிலை பாற்பிறந்தகல்விச்செருக்கும் மயக்கமும் அவரை உண்மை யுணரவிடாவாயின. உண்டகையெல்லாம் நெய்யொழுகு மாறு பேருணவு கொள்வதும், மூக்கினால் முரலும் மெல்லோசையே எழும் சமண் மந்திரங்களை ஒதித் திரிவதுமே நாவரசர் சமணராய் இருந்து செய்த பெருஞ்செயல்.

இச் சமண் வாழ்வின் நீங்கிச் சைவ வாழ்வு பெற்ற பின்பும், அவ்வாழ்வில் தாம் இருந்த இருப்பை எண்ணிப் பல திருப்பாட்டுக்களில் நாவரசர் வருந்திக் கூறியுள்ளார். "எண்ணில் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான்"[1] “சமணரொடு அயர்த்து நாளும் மறந்து அரன்திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன், வாழ்வெலாம் வாளாமண்மேல்”[2] கழித்தேன். சமணர் கூட்டத்துட் புக்கு "அழுந்தி விழாமே போத வாங்கிப் பத்திக்கே வழிகாட்டிப் பாவம் தீர்த்துப், பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித் தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேன்"[3] என்பன முதலியன இதற்குப் போதிய சான்றுகளாகும்.

இனி, சமண் சமயத்தில் தான் இருந்தது நெடுங்கால மென்பதை, “பல்லுரைச் சமணரோடே பலபல காலமெல்லாம் சொல்லிய செலவு செய்தேன், சோர்வன் நான் நினைந்தபோது”[4] என்று குறிப்பதும், சைவ வாழ்வில் தலைப்பட்டபோது மிக்க முதுமையெய்திய செய்தியை, “தளையவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பமெய்த, இளையனு மல்லேன், எந்தாய், என்செய்வான் தோன்றினேனே”[5] என்று குறிப்பதும் நோக்கற்பாலன. நோக்கு-


  1. திருநா. 266 : 3.
  2. திருநா. 305 : 8.
  3. ௸ 298 : 7.
  4. ௸ 39 : 7.
  5. ௸ 78 ; 9.
SIV—9.