பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

சைவ இலக்கிய வரலாறு

தந்தால், உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி"[1] என்பது முதலிய பல திருப்பாட்டுக்களில் எடுத்துரைக்கின்றார். "ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள், ஞானத்தால் தொழுவேன் உனை நானல்லேன், ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு, ஞானத்தாய் உனைநானும் தொழு வனே"[2] என்பது முதலிய திருப்பாட்டுக்களால் ஞான நெறியின் நலத்தை மிக்க நயம்படக் கூறுகின்றார் நம் நாவரசர்.

யோகஞான நெறிகளால், இறைவன், "அண்டமாய் ஆதியாய் அருமறையோடு ஐம்பூதப் பிண்டமாய், உலகுக்கு ஓர் பெய்பொரு"[3]ளாக இருத்தலையுணர்பவர், எங்கும் யாவையுமாய் இருத்தலைக் கண்டு எல்லாம் சிவமாயிருப்பது எனத் தேறி இனிது உறைவர் என அறிவு நூல்கள் கூறுகின்றன. அவர் சிந்தைக்கண் சிவமாய் கின்று இன்புறுத்தும் சிவபெருமான், எங்கும் தன் இருப்பை இனிது விளக்குகின்றார் என்பதை நம் நாவரசர், "அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே"[4] என்று ஓதி அறிவுறுத்துகின்றார்,

இறைவனது உண்மையை உணர்ந்து அவனது அருணநலம் பெறுவது குறித்தே உலகில் சமயம் பலவும் உண்டாயின. ஆதலால், அச்சமயங்கள் பலவும் அவனுக்கு ஏற்பனவேயாகும். சமயங்கள், பலவாய்த் தம்மில்வேறுபாடு சில உடையவாய் இருப்பது கொண்டு, பிணங்கிப் பூசலிட்டுப் பேதுறுவது முறையன்று என்பது திருநாவுக்கரசர் திருவுள்ளமாகும். அவர் காலத்தே சமயங்கள் அறுவகைப்பட்டுத் தம்மில் வேறுபட்டு இகலி நின்றமையால் அதனை விலக்கற்கு, "சமயமவை ஆறினுக்கும் தலைவன் தான் காண்"[5] என்றும், "விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே, எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்"[6] என்றும் கூறியுள்ளார். இக் கருத்தே


  1. திருநா. 239 : 1.
  2. திருநா. 205 : 3.
  3. ஷ. 7:4
  4. ஷ 250: 9.
  5. .ஷ 279; 7.
  6. ஷ 60; 9.