பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர் 135,

கொண்டு பிறாண்டும் அவர், "மிக்க சமயங்கள் ஆறின் உரு வாகிநின்ற தழலோன்1" எனவும், "ஆறொன்றிய சமயங் களின்அவ்வவர்க்கு அப்பொருள்கள் வேறொன்றிலாதன2." எனவும், ஆறு சமயத்து அவரவரைத் தேற்றும் தகையன"3 எனவும் பல படக் கூறி வற்புறுத்தியுள்ளார்.

மக்களினத்தில், அந்நாளில், குலம் கோத்திரம் முதலிய வற்றின் பெயராலும், புலாலுண்டல் முதலிய செயல் . வகையாலும் வேற்றுமைகளும் வேறுபாடுகளும் தோன்றி நிலவின.இறைவன் திருவருட்பேற்றில் நாட்டமுடையார்க்கு இவ்வேற்றுமை கூடாது என்றும், இவ்வேற்றுமையுளதாயின் திருவருட்பேற்றுக்குச் சாதனமான அடியார் வழிபாடு நன்கு வாயாது என்றும் பிறவும் கருதி இவ் வேறு பாட்டைக் களைதற்குத் திருநாவுக்கரசர் பெரிதும் முயன் றுள்ளார் . "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர், பாத்திரம் சிவம் என்று பணிதிரேல், மாத்திரைக்குள் அருளும் மாற் பேறரே4 " என்று மக்களே நோக்கி அறிவுறுத்துவதும், "ஏதும் ஒன்றும் அறிவிலராயினும், ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்குப், பேதமின்றி அவரவர் உள்ளத்தே, மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே"'5 என வேற்றுமை பாராட்டாத ஒருமை நிலையினை இறைவன்மேல் வைத் துரைப்பதும் பிறவும் இதனை வற்புறுத்தும் சான்றுகளாகத் திகழ்கின்றன.

  இனி, இறைவன் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் தோறும் சென்று வழிபடுவதும், புண்ணிய நீர் நிலைகட்குச் சென்று அவற்றில் படிந்து நீராடுவதும் சமயநெறி நிற்பார்க்கு உரிய சமய வொழுக்கங்களாக அந்நாளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறே இறைவன் திரு வுருவமைத்து வழிபடுவது, சமய ஞான நூல்களை இடை விடாது பயிலுவது, வேதமோதுவது, வேள்வி செய்வது,

______________________________ 1. திருநா. 14: 3. 2. திரு.நா. 101 :4. 3. ஷ 101: 7. 4. ஷ. 174 : 3 5. ஷ 174 : l.