பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
156



கின்றார், தில்லைநகரும் அந்நாளில், நீலம் மலர்ந்து வாளை பாயும் வயல் சூழ்ந்து வண்டு பண்பாடும் சோலையுடன் பாளையுடைக் கமுகு ஓங்க நிற்கும் பல மாடமாளிகை கொண்டு இனியக் காட்சி வழங்கிற்று. தினைத்தனையும் வேதம் குன்றாச் செந்தீயந்தணர்களும் சிட்டர்களும் தில்லையில் வாழ்ந்து வந்தனர். அந்நாளில் தில்லைக்குச் சிதம்பரம் என்ற பெயர் கிடையாது; பிற்காலத்தில்தான், அங்குள்ள சிற்றம்பலம் சிற்றம்பலம் எனச் சிதைந்து பின் சிதம்பரம் எனத் திரிந்தது. அதன் வரலாறு அறியாத வடமொழியாளர் சித்-அம்பரம் எனப் பிரித்துச் சிதாகாசம் என்பது முதலிய பல கருத்துக்களைப் புகுத்தி உரைப்பாராயினர். இவ்வாறே பிற்காலத்தில் தமிழ்ப்பேரூரும் சிற்றறூருமாகிய பலவும், தமிழர் தமது வரலாறு மறந்த அற்றம் நோக்கி, வடமொழிப் பெயர் பெற்று வழுமலிந்த கற்பனைக் கதைகட்கு இடமாகிக் கல்வி கற்கும் இளைஞர் உள்ளத்தில் சமய உணர்வும் பற்றும் தோன்றாத செயன்முறைகளை மேற் கொண்டு நிற்பனவாயின.

<b2 திருவதிகைb/>. இது, திருநாவுக்கரசர் பிறந்த திருவாமூர்க்குக் கிழக்கில் கெடிலம் என்னும் ஆற்றின் வடகரையில் உள்ளதொரு திருப்பதி. திருநாவுக்கரசர், இதனை," கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே"1 என்று குறிக்கின்றார். இறைவன் முப் புரத்தை எரித்ததாகிய வீரட்டம் புரிந்த இடம் இத் திரு வதிகையே என்பர் ; அதற்கேற்ப," செற்றார் வாழும் திரிபுரம் தீயெழ, வில்தான் கொண்டு எயில் எய்தவன் வீரட்டம், வில்லால் மூவெயில் எய்தவன் வீரட்டம்" ' "விண்டார் மூவெயில் எய்தவன் வீரட்டம்" 2 எனப் பன்முறையும் கூறுகின்றார். இத் திருவதிகைக்கு அதியரைய மங்கை என்று வேறு பெயர் ஒன்று உண்டெனப் பல்லவர் காலத்துக் கல்வெட்டொன்று3 கூறுகிறது. திருநாவுக்- ______________________________

1. திருநா. 105 : 1.
2. திருநா. 167 : 4, 5, 6. 
3. A. R. No. 360 of 1921, 
   18th regnal year of 
   Nirupatunga.