பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சைவ இலக்கிய வரலாறு

இனித் தமிழ் கூறும் நல்லுலகம் எனப்படும் தமிழ் நாட்டுள் நுழையின், வடக்கில் காஞ்சிமாநகர் இனிய காட்சி வழங்கும். இக்காஞ்சிநகர் கி.பி. ஆறு ஏழாம் நூற்றாண்டிலேயே கல்வி சிறந்த புகழெய்தி யிருந்தது. புத்த சமய நூலாகிய நியாயபாடியம் எழுதிய[1] வாற்சாயனர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட திராவிட நாட்டவர் எனப்படுகிறார், திக்கநாகர், தருமபாலர், போதிதருமர் முதலியோர் காஞ்சியைச் சூழ்ந்த தமிழ் நாட்டிற் பிறந்த தமிழ்ப் பெருமக்களாவர். வடநாட்டில் புத்தபெருமான் தோன்றிப் புத்த சமயங்கண்டு மக்கட்குரைத்த அந்நாளில், காஞ்சியிலும் அப்புத்தசமயக் கருத்துப் பரப்பப்பெற்றதெனக் கேள்விவழிச் செய்தி கூறுகின்றது. புத்தபெருமானே காஞ்சிமாநகர்க்கு வந்திருந்து தமது புத்த தருமத்தை இந்நாட்டு மக்கட்கு அறிவுறுத்தினரெனவும் உரைப்பதுண்டு. சிங்களநாட்டு மகாவமிசமும் பாகியான் எழுதிய குறிப்புக்களும், பல்லவராட்சி தோன்றுமுன்பே, பாண்டிநாட்டில் புத்த சமயம் பரவியிருந்ததெனக் குறிக்கின்றன. மணிமேகலைஎனும் தமிழ்நூல், சேரநாட்டு வஞ்சிமாநகரிலும், சோழநாட்டுக் காஞ்சிமாநகரிலும், காவிரிப்பூம்பட்டினத்திலும், புத்த சமய சங்காராமம் இருந்ததைக் குறிக்கின்றது. அந்நாளில் சோழ வேந்தன் ஒருவனால் காஞ்சிமா நகரில் புத்த சயித்தியம் ஒன்று நிறுவப்பெற்றதென்றும் மணிமேகலை கூறுகிறது. அந்நூலில் அறவண அடிகள் என்பார் மணிமேகலைக்கு உணர்த்திய தருக்கமுறை பின்பு திக்கநாகரென்பவரால் வடநாட்டவர்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்துணையும் கூறியவற்றைத் தொகுத்து நோக்கு வோமாயின், பல்லவராட்சி தமிழ்நாட்டில் தோன்றுதற்குமுன்பே, தமிழகத்துச் சோழநாடு, பாண்டிநாடு, சேர நாடு என்ற மூன்று முடிவேந்தர் நாடு முழுதும் புத்த சமயம் பரவி யிருந்ததென்பது தெள்ளிதாம்.

  1. 1. ஏனை அருத்த சாத்திரம், காம சூத்திரம் முதலிய வட நூல்களை வழங்கிய வாற்சாயனர் இவரின் வேறாவர் என்பர்.