பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

191

திருவாரூரில் பரவையாருடன் நம்பியாரூரர் வாழ்ந்து வருகையில், திருவாரூர்ப் பங்குனி விழாச் செலவிற்குப் பொன் வேண்டும் எனப் பரவையார் அவர்பால் முறையிட்டனர். ஆரூரர் இறைவனைப் பரவி வழிபட நினைந்து திருப்புகலூர்க்குச் சென்று அன்றிரவு அங்கே தங்கினார். உறங்கும் போது தலையணைக்காக அங்கே திருக்கோயிலுக்குள் கிடந்த செங்கற்களுள் இரண்டை வைத்துக் கொண்டு உறங்கினார். விடிந்தபோது அக்கற்கள் பொற் கட்டிகளாக மாறியிருந்தன. அது கண்டவர், இறைவனது வள்ளன் மையை வியந்து, "தம்மையே புகழ்ந்து இச்சைபேசினும்"[1] எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி இன்புற்றனர். பின்னர், நம்பியாரூரர் காவிரிக் கரையிலுள்ள நன்னிலம், திருவிழிமிழலை, திருவலஞ்சுழி, திருக்குடந்தை முதலிய திருப்பதிகளைப் பரவிக் கொண்டே திருவாலம்பொழிலை அடைந்து தங்கியிருக்கையில் "மழபாடி காண மறைந் தனையோ" என்று ஒரு குறிப்பு அவர் கனவில் உளதாயிற்று. உடனே அவர், கண் விழித்து எழுந்து காவிரியைக் கடந்து வடகரை வழியாகத் திருமழபாடியடைந்து "பொன்னர் மேனியனே"[2] எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி, மழபாடி இறைவனை வணங்கினார். அங்கிருந்து திருவானைக்கா முதலிய திருப்பதிகளை வழிபட்டுக் கொண்டே திருப்பாச் சிலாச்சிராமம் சென்று சேர்ந்தார். அங்கேயும் அவர்க்குப் பொன் வேண்டியிருந்தமையின், இறைவன்பால் அக்கருத்தைத் தெரிவித்துக் கொண்டார். பொருள் வரச் சிறிது காலம் தாழ்த்தது. அப்போது "வைத்தனன் தலைக்கே"[3] எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி முடித்தார். பொருளும் வந்து சேர்ந்தது. இறைவன் பேரருளை நினைந்து நெஞ்சு உருகிப் பரவிய ஆரூரர், திருமுதுகுன்றத்துக்குச் செல்லும் கருத்துக் கொண்டு, இடையிலுள்ள திருப்பதிகளை வணங்கினவராய்த் திருக்கூடலையாற்றுார் வந்து சேர்ந்தார். ஊரருகே


  1. 1. சுங், தே. 34
  2. 2. ௸. 24
  3. 3. ௸. 14