பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

195



வருபவர், திருவெண்பாக்கம் என்னும் ஊரை அடைந்து அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவன் திருமுன் "பிழை யுளன பொறுத்திடுவீர்"[1] என்ற திருப்பதிகம்பாடி ஊன்று கோல் ஒன்று அருளப்பெற்றார். பின்பு, அவர் அடியார்சிலர் உடன்வரத் திருவாலங்காடு, திருவூறல் முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு காஞ்சிமாநகரம் வந்து சேர்ந்தார். அங்கே, திருப்பதிகம்பாடி வழிபட்டார்க்கு, ஒருகண், பார்க்கும் தகுதிபெற்றது. அதனால் மகிழ்ச்சிகொண்ட ஆரூரர், "ஆலந்தான் உகந்து அமுது செய்தானே"[2] என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி, அதன்கண் தாம் கண் பெற்ற செய்தியைக் "கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே" என்று எடுத்தோதி இன்புற்றார்.

காஞ்சிமா நகரின் நீங்கிவரும் நம்பியாரூரர் திருவாமாத்தூர், திருவரத்துறைமுதலிய திருப்பதிகளைத் திருப்பதிகம் பாடிப் பரவிக்கொண்டு திருவாவடுதுறை அடைந்து இறைவனப் பதிகம்பாடிப் பரவித் திருத்துருத்தி சென்று சேர்ந்தார். அங்கே அப்போது அவர்க்கு உடம்பில் உண்டாகியிருந்த ஒருவகை நோய் அங்குள்ள திருக்குளத்தில் மூழ்கியதனால் நீங்கிற்று. அதனல், அவர், இறைவனை, "மின்னுமா மேகங்கள்"[3] எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் புகழ்ந்தார். சிலநாள் அங்கே தங்கியிருந்து பின் திருவாரூர் சென்று சேர்ந்தார்.

திருவாரூரில், இறைவன் திருக்கோயிலை வலம் வந்து பணிந்து, அன்பு மேலீட்டால், பல பதிகங்களைப் பாடிப் பரவிய நம்பியாரூரர், ' "மீளா அடிமை உமக்கேயாளாய்" [4] என்ற திருப்பதிகத்தில் தாம் இறைவற்கு ஆளாகிய தன்மையையும் மற்றைக் கண்ணின்றி வருந்தும் திறத்தையும் சொல்லி முறையிட்டார் ; மற்றைக்கண்ணும் நலம் பெற்றது. நம்பி ஆரூரர் இரு கண்ணாலும் இறைவன் திருக் கோலத்தைப் பருகுவது போலும் ஆர்வமுடன் பார்த்துப் பேரின்புற்றார்.


  1. 1. சுந் . தே. 89
  2. 2. சுந் . தே. 61
  3. 3. ௸ 74
  4. 4. ௸ 95