பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

சைவ இலக்கிய வரலாறு


பேர் சென்று அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டார். அதன் பின் பாண்டி நாடு கடந்து சோழ நாட்டுப் பாதாளிச்சரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்துக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார்.

சில நாட்கள் கழிந்தபின், சேரமான், நம்பியாரூரரைத் தமது சேரநாட்டுக்கு வருமாறு வேண்டினார். ஆரூரரும் அதற்கிசைந்து உடன் புறப்பட்டார். இருவரும் காவிரியின் தென்கரை வழியாகச் சென்று திருக்கண்டியூரை அடைந்தனர். எதிரே வடகரையில் திருவையாறு காட்சியளித்தது. அப்போது, காவிரி பெருக்கிட்டுச் சென்றமையின் மனங் கலங்கிய ஆரூரர், "எதிர்த்து நீந்த மாட்டேனான் எம்மான் தம்மான் தம்மானே"[1] என்றொரு பதிகம் பாடினார் ; வெள்ளம் பிளவுபட்டு வழிவிட்டது. இருவரும் ஐயாற்று இறைவன் அடிபணிந்துகொண்டு மேற்கே கொங்கு நாடுகடந்து மலைநாட்டுத் திருவஞ்சைக்களம் சென்று சேர்ந்தனர். அங்கே, அஞ்சைக்களத்து அப்பனே "முடிப்பது கங்கை”[2] என்றொரு பதிகம்பாடிப் பரவினார்.

சேரமான் பெருமனையில் உயர்விருந்தாய்ப் பன்னாட்கள் தங்கிய நம்பியாரூரர்க்குத் திருவாரூர் நினைவு உண்டாயிற்று. சேரமான்பால் பிரியாவிடை பெறுவார்க்கு அவர் பெரும் பொருள் நல்கினர். நம்பியாரூரர் அதனைப் பெற்றுக்கொண்டு கொங்குநாடு புகுந்து திருமுருகன் பூண்டிக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், கள்வர் சிலர் போந்து அப்பொருளை ஆறலைத்துச் சென்றனர். அவர் முருகன்பூண்டியை அடைந்து அங்கே கோயில் கொண்டிருக்கும் இறைவனை வணங்கி, இனிய பதிகம்பாடி முறையிட்டார். அன்றிரவே அவர் இழந்த பொருள்கள் அத்தனையும் வந்து சேர்ந்தன. ஆரூரர் அவற்றைப் பெற்றுக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார்,

பின்பொருகால் நம்பியாரூரர் சேரமானைக்காணவேண்டுமென நினைத்துச் சேரநாட்டுக்குச் சென்றார். செல்லுங்கால், திருப்புக்கொளியூர் சென்று அங்கே முதலையுண்ட


  1. 1. சுந் தே. 77 9.
  2. 2. சுந். தே. 4ளி