பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

199


சிறுவன் ஒருவன் உயிர்த்தெழுமாறு அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அவிநாசியப்பரைத் திருப்பதிகம் பாடிச் சிறப்பித்தார். அதன்பின் மலைநாடு புகுந்து மகோதை நகரைக் குறுகினர். அவரது நல்வரவு கேட்ட சேரமான் பெருமகிழ்ச்சியுடன் சிறந்த முறையில் எதிர்கொண்டு அழைத்துச்சென்று பெருஞ் சிறப்புச்செய்தார்.

நம்பியாரூரர் மகோதைக்கு அண்மையிலுள்ள திருவஞ்சைக் களத்தில் தங்கித் "தலைக்குத் தலைமாலை"[1] என்று தொடங்கும் திருப்பதிகம்பாடி வழிபட்டுக் கொண்டிருந்தார். இருக்கையில், இறைவன் திருவருளால் வெள்ளை யானை வர அதன்மேல் ஏறித் திருக்கயிலாயம் செல்லலுற்றார், இஃதுணர்ந்த சேரமான் தன் குதிரைமீதேறி யானைக்கு முன்னே துணைபுரிந்து சென்றார். இருவரும் திருக்கயிலை சென்று சேர்ந்தனர்.

வரலாற்றாராய்ச்சி

மேலே கூறியவரலாறு சேக்கிழாரடிகள் உரைத்த திருத்தொண்டர் புராணத்திற் கண்டது. இவ்வரலாற்றை நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்களைக் கொண்டு கானுங்கால், இத் திருப்பதிகங்கள் பலவும் வரலாற்றிற் கண்ட நிகழ்ச்சிகளை வற்புறுத்தும் வகையில் அமைந்திருப்பது விளங்குகிறது.

நம்பியாரூரர் பிறந்தவூர் திருநாவலூர் என வரலாறு கூறிற்று. அதனே நம்பியாரூரர்! "நாவலூர் நமக்கும் நாதனுக்கும் நரசிங்கமுனையரையனுக்கும் ஊர்”[2] என்று கூறுகின்றார். அவருடைய பெயரை, ஆரூரன், வன்றொண்டன், நம்பி, நாவலூராளி முதலியவாக வரலாறு உரைத்தது, " நாவலர்கோன் நம்பியூரன்"[3] என்றும், "நாவல் ஆரூரன் நம்பி"[4] என்றும், நாடெலாம் புகழ் நாவலூராளி நம்பி வன்றொண்டன் ஊரன்"[5] என்றும் வரும் அவருடைய


  1. 1. சுந். தே. 4.
  2. 2. சுங் தே. 17:11.
  3. 3. ௸ 4 : 10.
  4. 4. ௸ 53: 10.
  5. 5.௸ 64;10