பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

223

கள் பொலிவுறுகின்றன. வயல்களில் நெல்லும் கரும்பும் நிரைநிரையாய் நின்று காட்சியளிக்கின்றன. கன்றினம் கரும்பின் முளைகளை மேய, உடன் மேயும் கறவைகள் கழு நீர்க்கொடிகளே மேய்கின்றன. நீர் இடையருமையால் கயல் மீன்கள் வளம் பெறுகின்றன. பொய்கைகள் தாமரை மலர்ந்து காண்பார் கண்கவரும் கவின்கொண்டு விளங்க, மகளிர் நீராடி இன்புறும் மகிழ்ச்சி மிகவும் சிறந்து மாண்புறுகின்றது. பொழில்களில் பல்வகைப் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி நிற்க, வண்டினம் தேனுண்டு பண்பாடுகின்றன; மயில்கள் நடமாடி மகிழ்கின்றன; ஆங்கு நிற்கும் புன்னை மரங்கள் முத்துப்போல் அரும்பிப் பொன்போல் மலர்ந்து பவளம் போற் காய்த்து இனிய காட்சி வழங்குகின்றன. கமுகு மரங்கள் பாளை விரிதலால் தேமணங் கமழும் அப் பொழில்களினூடே தென்றல் புகுந்து மன்றல் செய்கிறது.

நீர்வளஞ் சிறந்த ஊர்தொறும் மறையவர் உறைவர் என்பது ஒருதலை. அதனால் அங்கே அவர்களது இருப்புச் சொல்லாமலே விளங்கும். அவர்கள் காலம் அறிந்து மறையோதுவர்; அதனால் அவர் உறையும் ஊர்ப்பகுதி மறையோசை மிக்குளது. ஒருபால் கலைபயிலும் அந்தணர் உறைகின்றனர். அவர்கள் சொல்லிலக்கணமும் பொருளிலக்கணமும் நான்மறையு மாகியவற்றைக் கற்பாரும் கேட்பாருமாய் உள்ளனர்; அதனோடு அவர்கள் இறைவனைத் தோத்திரம் பல சொல்லித் துதிக்கின்றனர். ஒருபால் அந்தணர்கள் வேள்வி செய்ய, அவருடைய ஓமப்புகை விண்படர்ந்து மழை முகில் போல் தோன்றுகிறது.

ஒருபால் மண்டபங்களும் கோபுரங்களும் மாளிகைகளும் மல்கிய வீதிகள் உள்ளன. அவற்றின்கண் விழவொலியும் முழவொலியும் சிறுவர்களின் விளையாட்டொலியும் மிக்கிருக்கின்றன. இவ்வண்ணம் அழகு திகழும் கலயநல்லூரில் சோலைகளில் குயில்கள் கூவ, மயில்கள் ஆட, வண்டினம் பாட, கிளிகள் இறைவன் திருப்பெயரைக் கற்றுச்சொல்ல, காலை மாலை என்ற இருபோதும் இறை