பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

சைவ இலக்கிய வரலாறு

வன்பால் உண்மையன்பு கொண்டு உளமுருகி வழிபடும் அடியவர் கூட்டம் இடையறாது காட்சி தருகின்றது.[1]

இப்போது வேதாரணியமென வழங்கும் திருப்பதி நம்பியாரூரர் முதலியோர் காலத்தில் மறைக்காடு என்ற திருப்பெயரால் விளங்கிற்று. இது நெய்தல் வளம் படைத்த சோணாட்டுக் கடற்கரையூர்களுள் ஒன்று. இங்கே தாழைப் பொழில்களும் புன்னைப் பொழில்களும் மல்கியிருக்கின்றன. தென்னைச் சோலையும் பெண்ணைக் காடும் இப்பகுதியில் மிக்கிருக்கின்றன. கடற்க்ரையில் தூயவெண் மணல் பரந்துளது; மலைபோலக் கடலலைகள் போக்து கரையை மோதியலைக்கின்றன. அதனால் கடற்கரையில் சங்கும் இப்பியும் வலம்புரியும் மிகுதியாக ஒதுக்குண்டு வாழ்கின்றன.

மணல் பரந்த கரையில் தாழையும் ஞாழலும் செறிந்த படப்பையை அடுத்து வாழைகள் நிற்கும் வயல்கள் உள்ளன. தாழைத் திரளின் இடையில் வாழும் குரங்குகள் வாழைக் கனியை உண்கின்றன. தகர மரங்களுடனே நிற்கும். தாழை ஞாழல் முதலியவற்றின் நீழலில் கடற்கண் வாழும் சுறா மீன்களும் மகர மீன்களும் முத்தையும் பவளத்தையும் கொணர்ந்து கரையில் ஒதுக்குகின்றன. தெங்கும் பனையும் நிற்கும் மணற்பரப்பில் அவற்றின் பழங்கள் உதிர்ந்து கிடக்கின்றன. சங்கு, இப்பி, வலம்புரி முதலியவற்றை இடறிவரும் மரக்கலங்கள் கடற்கரையில் தங்குகின்றன. முகில்கள் தங்கும் சோலைகளின் முடியளவும் உயர்ந்து மலையெனத் திரண்டு வரும் கடலலைகள் மோதுகின்றன. கடலகத்தேயுள்ள அருமணிகளை வங்கங்களும் சுறா மீன்களும் கொணர்ந்து கரையில் எறிகின்றன. நீனிறக் கடலருகே இடையிடையே உள்ள கழிகளைச் சார்ந்து தாழைகள் மலிந்துள்ளன. அவற்றின் மடலிடையே கொக்கும். நாரையும் பிறவுமாகிய நீர்க்குருகுகள் வாழ்கின்றன. சில காலங்களில் கடலலைகள் வலம்புரிகளேயும் சலஞ்சலங்களையும் கரையில் எற்றி அலைக்கின்றன. நெல்விளையும்


  1. சுங். தே. 16:1-11.