பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

227

 பயனனைக்கொண்டு ஒழியாமல் அவற்றின் இயைபால் உளதாம் சிற்றின்பத்துக்கு அடிமையாகி அவற்றையே உறுதியாகக் கருதும் மயக்கம் உயிர்கட்கு உண்டாவது இயல்பு. அவ்வாறு மயங்குவோரே பெரும்பாலோர். அவரைத் தெருட்டுவதும் திருவருள் ஞானம் பெற்றோர் கடனாதலின், அருண்ஞானச் செல்வராகிய நம்பியாரூரர் அறிவுரை பல வழங்குகின்றார்.

உலக வாழ்வுக்கு முதலாகும் உடம்புக்குத் தோற்றம் உண்டேல் மரணமுண்டு; இன்பமுண்டேல் துன்பமுண்டு; இதன் தோற்றத்துக்கும் ஆக்கத்துக்கும் காரணராகும் தந்தை தாயர் எள்ளளவும் சார்வாகார்; நாட் செல்லச் செல்ல இவ்வுடம்பு தேய்ந்து வீழ்ந்தொழியும்; மன்னர் சூழ வரும் பெருவாழ்வு வாழ்வோரும் சாவர்: செத்த போதில் யாரும் துணையாவதில்லை. இவ் வுடம்பகத்தே ஐம்புலன்கள் என்னும் வேட்டுவர் ஐவர் உளர்; அவர் நம்மை வஞ்சிப்பர்; அவர்கள் செய்யும் வஞ்சனையால் நாம் பிறரால் இகழப்பட்டு அல்லலுறுவோம்; ஆதலால்,

"கூசம் நீக்கிக் குற்ற நீக்கிச் செற்றம் மனம்நீக்கி

வாசமல்கு குழலினார்கள் வஞ்சமனை வாழ்க்கை

ஆசைநீக்கி அன்பு சேர்த்தி, என்பணிந்து ஏறேறும்

ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே"[1]

என்று அறிவுறுத்துகின்றார்.

இறைவன் திருவருளோடு இயைந்து வாழும் வாழ்வே "இன்பத்தோடு இசைந்த வாழ்வு;[2]” ஏனை உடம்பை நச்சி வாழும் உலக வாழ்வு, "பொய்த் தன்மைத்தாய மாயப் போர்வையை மெய் என்று எண்ணும் வித்தகத்தாய வாழ்வு;[3] "உடம்பென்பது, 'ஊன்மிசை யுதிரக்குப்பை, ஒரு பொருளிலாத மாயம்;” [4] இதனை மகளிரே பெரிதும் மதிப்பர். இவ்வுடம்பின்கண் காணப்படும் தத்துவ தாத்துவிகக் கூறுகளைச் சமயவாதிகள் வேறு வேறு கூறுவர்.


  1. சுந்.தே.7:5
  2. சுந்.தே.8:1
  3. சுந்.தே.8:9
  4. சுந்.தே.8:3