பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

231


இனி, திருவள்ளுவனார் வழங்கிய திருக்குறளை யெடுத்தாளாத செந்தமிழ்ச் சான்றோர் இலர் என்பது உலகறிந்த உண்மை. அதற்கேற்ப நம்பியாரூரர் திருக்குறள்கள் பலவற்றைத் தம்முடைய திருப்பாட்டுக்களில் வைத்து அமைத்து அழகு செய்துள்ளார். திருவள்ளுவனார் இறைவனைப் “பொறிவாயில் ஐந்தவித்தான்”[1] என்று குறித்தாராக, நம்பியாரூரர் “பொறிவாயிலிவ் வைத்தனேயும் அவியப் பொருது உன் அடியேற்கும் சூழல் சொல்லே”[2] என்றார். “அகரமுதல வெழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே யுலகு” [3] என்ற திருக்குறள், “அகரம் முதலின் எழுத்தாகி நன்றாய் அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே”[4] என்றும், “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”[5] என்ற திருக்குறள், “ஓடுபுனற்கரையாம் இளமை உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி”[6] என்றும் வரும் திருப்பாட்டுக்களில் அமைந்துள்ளன.

இனி, அக்காலத்து வழங்கிய பழமொழிகள் பல நம்பியாரூரருடைய பாட்டுக்களில் காணப்படுகின்றன. பேயோடாயினும் கூடிய வழி அதனிற் பிரிவதென்பது துன்பந் தருவதாம் என்று பழையோர் கண்டனர். அவரது பழமொழி, முன்றுறையரையனார் செய்த பழமொழி நானூறென்னும் நூலில், “இலங்கருவி, தாஅய் இழியும் மலைநாட, இன்னாதே, பேஎயோடானும் பிரிவு” [7] என்று காட்டப்படுகிறது. இதனை நம்பியாரூரர், “பேயோடேனும் பிரிவொன்று இன்னாது என்பர் பிறரெல்லாம்” [8] என்று கூறுகின்றனர். எய்ப்பினில் வைப்பென்று ஒரு பழமொழி உண்டென முன்றுறையரையனார் “தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ, எய்ப்பினில் வைப்பென்பது”[9] என்று கூறினர். நம்பியாரூரர் அப்பழ


  1. குறள் 6.
  2. சுந். தே 3 : 2.
  3. ௸ 1.
  4. ௸ 3 : 7.
  5. ௸ 339.
  6. ௸ 3 : 4
  7. பழமொழி. 126.
  8. ௸ 95 : 9.
  9. ௸ 358.