பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

சைவ இலக்கிய வரலாறு

மொழியை, “நல்லடியார் மனத்து எப்ப்பினில் வைப்பை நான் உறு குறையறிந்து அருள்புரிவானை”[1] எனத் தாம் மேற்கொண்டுகூறுகின்றார். இவ்வாறே,“பஞ்சியிடப்புட்டில் கீறுமோ” [2] “வெட்டெனப்பேசன்மின்”[3] “பொற்குன்றம் சேர்ந்த காக்கையும் பொன்னாம்,”[4] “இரும்புண்ட நீர் போல்”[5] கணக்கு வழக்கு[6] என்பன முதலாகப் பல பழமொழிகள் இவருடைய திருப்பாட்டுக்களில் காணப்படுகின்றன.

சொல் நயம்

இங்ஙனம் பண்டைச் சான்றோர் வழங்கிய சொற்கள், சொற்றொடர்கள், கருத்துக்கள், பழமொழிகள் முதலியவற்றைத் தாம் பாடியருளும் திருப்பாட்டுக்களின் இடையிடையே தொடுத்து இனிமை அமையப்பாடும் நலமிக்க நம்பியாரூரர், பாடும் பாட்டுக்கு ஏற்பச் சில அரிய சொற்களையும் சொற்றொடர்களையும் புதியனவாக அமைத்துக் கொள்கின்றார் மனத் திடபமில்லாத மக்களை ஓட்டை நெஞ்சினர் எனப் பிறரெல்லாம் கூறுவர். நம்பியாரூரர். “முன்பு சொன்ன மோழைமையான் முட்டைமனத்திரே”[7]என வழங்குகின்றார். சிறு மட்கலத்தைச் சிட்டி யென்றும், சிட்டென்றும், அதனால் அக்கலம் போலும் மண்டையோட்டைச் சிட்டு என்றும் அதன்மேலுள்ள குடுமியைச் சிட்டுக் குடுமி யென்றும் மக்கள் வழங்குவர். இறைவன் உணவிரந்து உண்ட மண்டைக்கலத்தையும் சிட்டெனக்குறித்து நம்பியாரூரர், பலியிரந்தூண் சிட்டு உகந்தார்க்கு இடமாவது நம் திரு நின்றியூரே”[8] என்றனர். திவ்விய என்னும் வடசொல்லைத் திப்பியமெனத் தமிழ்ப்படுத்து வழங்குவது பண்டைச் சான்றோர்மரபு. அதனையே தாமும் பின்பற்றி “தேசுடைய இலங்கையர்கோன் வரையொக்க அடர்த்துத்


  1. சுந். தே. 67 :2.
  2. சுந். தே. 43 : 1.
  3. ௸ 44 : 3.
  4. ௸ 50 : 4.
  5. ௸ 58 : 1.
  6. ௸ 54 : 1.
  7. ௸ 7 : 8
  8. ௸ 19 : 8.