பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்பியாரூரர்

247

கிறது. திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயில் தெற்குச் சுவரில் உள்ள நம்பியாரூரர் திருவுருவத்தின் கீழ் இளங்கிளையாரூரன் என்று பெயர் எழுதப்பட்டுளது; இதற்கேற்ப அவர் அவ்வூர்த் திருப்பதிகக் காப்புச் செய்யுளில் தன்னை “இளங்கிளை யாரூரன்”[1] என்று கூறுகின்றார்.

இதுகாறும் கூறியவற்றால், சைவ இலக்கியவுலகில் தலை சிறந்து நிற்கும் திருஞான சம்பந்தர் முதலிய மூவர் பாடியருளிய திருப்பதிகங்களும். அவற்றைப் பாடியுதவிய பெருமக்களும் மக்களின் பொது வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகச் சிறந்த செல்வாக்குப் பெற்றிருந்தமை நன்கு தெளியப்படும். சைவத் திருக்கோயில்களிலும் நிலையங்களிலும் தலைமையிடத்து வீற்றிருந்த இந்த இலக்கியங்கள், சைவர்களின் அறியாமை வறுமை கீழ்மைப் பண்புகளால் இன்று அவ்விடத்திலிருந்து நீக்கப்பட்டும் பேணற்பாடு இன்றியும் புறக்கணிக்கப்பட்டுள்ளன; இறைவன் திருப்பெயர்கள் யாவும் வடமொழியில் மாற்றி மறைக்கப்பட்டு விட்டன.



  1. சுந். தே. 29 : 1.0.