பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. சேரமான் பெருமாள்

தமிழகத்தின் மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு: அது தெற்கே கொல்லத்தையும் வடக்கிற் கோகரணத்தையும் கிழக்கில் மேலைமலைத் தொடரையும் எல்லையாகக் கொண்டது. பிற்காலத்தே அதன் தென்னெல்லை விகிந்து தென்பாண்டி நாட்டுக் கன்னியா குமரியையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் தன்கண் அடக்கிக் கொண்டது: வடவெல்லே குறுகித் தென் கன்னடத்துக்கும் தெற்கில் வருவதாயிற்று. சங்க காலத்தில் சேரநாட்டுக்கு வஞ்சியென்பது தலைநகர். இடைக் காலத்தே அவ்வஞ்சி நகர் கொடுங்கோளுர் எனப் பெயர்மாறிற்று. அங்கே இறைவன் கோயில் இருந்த பகுதி திருவஞ்சிக்களமாய் விளங்கிப் பின் திருவஞ்சைக்கள மென மருவி வழங்குவதாயிற்று. இப்போது அதனைத் திருவஞ்சிக் குளமெனவும் வழங்குகின்றனர். அவ் வூரிலுள்ள கல்வெட்டுக்கள் சில அதனைத் திருவஞ்சக்களம் எனக் கூறுகின்றன.

சேரநாட்டை யாண்ட வேந்தருள் செங்கோற் பொறையன் என்பான் முதுமை யெய்தவும் தவமேற் கொண்டு காட்டுக்குச் சென்றான்; அவனுக்குப் பின் சேரவரசுக்குரியார் யாவரென ஆராய்ந்த அரசியற் சுற்றத்தார் திருவஞ்சைக் களத்தில் அரசர் குடியில் தோன்றிச் சிவநெறி மேற்கொண்டு சிவத் தொண்டாற்றி வந்த பெருமாக்கோதையார் என்பாரைத் தேர்ந்து, அவரை யடைந்து சேரவரசினை ஏற்குமாறு வேண்டினர். தொடக்கத்தே, அவர், அது தான் மேற்கொண்டொழுகும் சிவப்பணிக்குத் தடை செய்யுமென அஞ்சி இறைவனே வேண்டி, அவர் அருள் பெற்று இசைந்தார்; அக்காலத்தே யாவும் யாரும் கூறுவதை விளங்கிக் கொள்ளும் கூர்த்த மதிநுட்பம் அருளவும் பெற்றார்; அதனால் அவர்க்குக் கழறிற்றறிவார் என்னும் சிறப்பும் உண்டாயிற்று. பெருமாக் கோதையார் சேரவரசை மேற்கொண்டு சேரமான் பெருமாளாய்ச் சிறப்புற்றார்.