பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சைவ இலக்கிய வரலாறு

சான்றோர் குறித்துள்ளதனால் அறியலாம். இடைக்காலக் கல்வெட்டுக்களும் அப்பகுதியைப் பெரும் பாணப்பாடி யென்றும், அப்பகுதியை யாண்டவர் வாணுதிராயரென்றும் கூறுகின்றன. அக்கல்வெட்டுக்களால், பாலாற்றின் வடகரையிலிருந்த பாணரசு பின்பு தென்பெண்ணைக் கரையிலும் இருந்ததென்றறிகின்றோம். பிற்காலத்தே பாணர்கள் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் வாணாதிராய ரென்றும், வாணகோவரைய ரென்றும் நிலவி யிருந்தனர். அதனால் சோழநாட்டுத் திருப்பாதிரிப்புலியூர் ஒரு காலத்தே பாணரசின் கீழ் இருந்திருக்கலாம்; ஆகவே, பாடலி பாணனாட்டதென உலோகவிபாகத்தைப் படியெடுத்தவர் கூறும் கூற்று ஏற்றுக் கோடற்குரியதே

இந்த “உலோகவிபாகம்” என்ற நூல் படி யெழுதி முடிந்த காலம் சகம் 380 (கி.பி. 458) என்று குறிக்கப்பட்டுளது. அந்நூல் தோன்றிய காலம் அதற்கு முன்னதாம் என்றும், எனவே பாடலிச் சமண் சங்கம் மதுரைச் சமண் சங்கத்தினும், காலத்தால் முற்பட்டதாமென்றும் அறிகின்றோம். இப்பாடலிச் சங்கம் தோன்றிய பின்பு சமண் சமயம் தென்னாட்டில் வலிய கால் கொண்டது. இந்த உலோக விபாகமென்ற நூல் தோன்றிய தொருபுறமிருக்க, மகேந்திரவன்ம பல்லவனையும் பாண்டியன் நெடுமாறனையும் திருநாவுக்கரசரையும் தொடக்கத்தில் தன்கண் தழீஇக்கொள்ளும் சால்பும் இச்சமயத்துக்கு அக்காலத்தே உண்டாயிற்றெனில் வேறு கூறுவது மிகை.

தென்னாட்டில் அக்காலத்தே பரப்பப்பெற்ற சமண் சமயம் திகம்பர சமண மாகும். இந்நாட்டில், ஐந்தாம் நூற்றாண்டில் சிம்மசூரி யென்பாரும் சருவநந்தி யென்பாரும் சமக்கிருதத்திலும் பிராகிருதத்திலும் பெரும் புலமை பெற்று விளங்கினர். ஏழாம் நூற்றாண்டில், பாடலிச் சமண் சங்கத்தில் மருணீக்கியார் தலைமை தாங்கினர்.

உலோக விபாகத்தின் இறுதி மூன்றாம் பாட்டு, இந்த நூல் சகம் 380-இல் முடிவுற்றதாகக் கூறுகிறது.