பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டு வரலாறு

19

பல்லவ பாண்டியர் காலத்துச் சைவ சமய நிலை

தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு உருவான தொடக்கம் தோற்றுவித்து நிற்கும் சங்க இலக்கிய காலத்தே சிவனை வழிபடும் சமயமாகிய சைவம் நிலவியிருக்கிற தென்பதைச் சங்க இலக்கிய வரலாறு காட்டுகின்றது. எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய கடவுளைத் தென்னாட்டவர் சிவன் என்று சொல்லி வழிபடுவர். இதனைத் திருவாதவூரடிகள், “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று குறிப்பது தமிழறிஞர் பலரும் சால அறிந்ததொன்று. மேனாட்டாராய்ச்சியாளருள் கிரை ர்சன், சர் ஜான் மார்ஷல், அறிஞர் எர்னஸ்டு மாக்கே. H. M. பிரெயில்ஸ் போர்டு முதலியோர் சிவனை வழிபடும் சமய நெறி திராவிடருடையதென்று துணிந்துரைத்துள் னர். தென்னாட்டைத் திராவிட நாடு என்றும் அந்நாட்டவரைத் திராவிடர் என்றும் உலக அறிஞர் பலரும் ஒருமுகமாகக் கூறுவது உண்மை. ஆகவே சிவநெறியாகிய சிவ வழிபாட்டுச் சமயம் தென்னாட்டுக்குச் சிறப்பாக உரியதாதல் தெளியப்படும். முழுமுதற் கடவுளாகிய சிவத்தைச் சைவனென்றும் வழங்குவதுண்டு. அதனால் சிவ நெறி சைவமென்று வழங்குவதாயிற்று. கி. பி. இரண்டாம் நூற்றாண்டினதெனப்படும் சிலப்பதிகாரத்தை அடுத்து நிற்கும் மணிமேகலை சைவ சமயத்தைக் குறித்துரைக்கின்றது. இது கொண்டு சைவ சமயம் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத் தொடக்கத்தே தென்னாட்டில் நிலவியிருந்த தொன்மைச் சமயமென்றும், அடுத்து வந்த புத்த சமண சமய காலங்களிலும் இது நாட்டு மக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்ததென்றும் நாட்டு வரலாறு நன்கு கூறுகின்றது.

பல்லவ பாண்டியர் காலத்தில் தென்னாட்டில் நிலவிய சைவ சமயம் மக்களுடைய வாழ்க்கையோடு பிரிப்பற ஒன்றுபட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்துக்கும் அரசியல் நீதி முதலிய துறைகட்கும் சைவக்கோயில்களே பெருநிலையங்களாய் விளங்கின. கோயில்களில் கல்வியும் ஏனைக்கலைகளும் ஒருசேர வளர்க்கப்பட்டன. கோயில்களை நடுவிடமாகக்கொண்டே மக்களின் நாட்டுவாழ்வும்