பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

சைவ இலக்கிய வரலாறு

புலமை நலம்

சாத்தனார் பாடிய பாட்டு, தொடக்கத்தில் பல்யாகசாலை, முதுகுடுமிப் பெருவழுதி கொற்கைகிழான் நற்கொற்றனைக் கொண்டு வேள்வி செய்ததும், வேள்வி நிகழ்ந்த இடத்தை வேள்விக்குடியெனப் பெயரிட்டு நற்கொற்றனுக்கு நல்கியதும், பிறகு அது களப்பிரர்களால் திறைப்பாகியதும் கூறுகிறது. அதன்பின் பாண்டியர் வரலாறு கூறத் தலைப்பட்டுக் கடுங்கோன், மாறவன்மன், சேந்தன், அரிகேசரி, கோச்சடையன் ஆகியோரைக் கூறி நெடுஞ்சடையன் அரசியற் சிறப்புக்களை விரியக் கூறுகிறது ; முடிவில் நெடுஞ்சடையன் ஆட்சி மூன்றாமாண்டில் கொற்கைகிழான் காமக்காணி நற்சிங்கன் வேள்விக்குடி பற்றி முறையிடுவதும், வேந்தன் ஆராய்ந்து வேள்விக்குடியை அவற்கு நலகுவதும் எடுத்துரைத்து அதற்குரிய எல்லைகளையும் பிறவற்றையும் உரைக்கின்றது.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வேள்விக் குடியைத் தோற்றுவித்து நல்கிய திறத்தை,

“நாகமா மலர்ச் சோலைகளிர் சினைமிசை வண்டலம்பும்
பாகனூர்க் கூற்றமெனும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச்
சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாது
கொற்கைகிழான் நற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்க

கேள்வியந்தணாளர் முன்பு கேட்க என்று எடுத்துரைத்து
வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்று அப்பதியைச்

சீரோடு திருவளரச் செய்தார் வேந்தன் அப்பொழுதே

நீரோடு அட்டிக் கொடுத்தமையால்”[1]

எனச் சுருங்கக் கூறுவர். இதன்கண் சொற்கணாளர் என்பார். சொல்லும் பொருளுமாகிய இலக்கணம் வல்லுநர், கேள்வி யந்தணராவார், வேதமோதும் வேதியர். வேதத் தைக் கேள்வியென்பது பண்டையோர் மரபு.[2] அட்டிக்-


  1. Ep. Indi. Vol. XVII. No. 16. வரி. 33-9.
  2. பதிற். 21.