பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சைவ இலக்கிய வரலாறு

அரசியல் வாழ்வும் இயங்கின. சுருங்கச் சொல்லுமிடத்து மக்களுடைய இம்மை மறுமையென்ற இருவகை வாழ்வுக்கும் சைவக் கோயில்களே தலைமை நிலையங்களாய் நலம் புரிந்து வந்தன என்பது மிகையாகாது.

பல்லவர் காலத்துக்கு முன்பே தமிழ்நாடு, தொண்டை நாடு, சோழநாடு, பாண்டியநாடு, மலைநாடு, கொங்குநாடு என ஐந்து பெருநாடுகளாகப் பிரிந்திருந்ததென்பது முன்பே காணப்பட்டது. இவற்றுள் மலைநாடும் கொங்கு நாடுமொழிய ஏனை மூன்று நாடுகளும் பொதுவாக நல்ல வளமுடையனவாகும். அம்மூன்றிலும் நீர்நில வளத்தாற் சிறப்புற்றது காவிரி பாயும் சோழநாடு. நாட்டு மக்களுடைய வாழ்வை நன்னெறிப்படுத்தற்கண் முற்பட்டு நின்ற கோயில்களும் அம்முறையே சோழநாட்டில் மிக்கும் ஏனையவற்றில் அந்த அளவிற் குறைந்தும் நிற்பன வாயின. இப்போது கிடைத்துள்ள சான்றுகளைக்கொண்டு நோக்கின் சோழநாட்டில் சிறப்பு மிக்க கோயில்கள் 190-க்குக் குறையாமலும், தொண்டை நாட்டில் 32-ம் தொண்டைநாட்டுக்கும் சோழநாட்டிற்கும் இடைப்பகுதியாகிய நடுநாட்டில் இருபத்திரண்டும், பாண்டிநாட்டில் பதினான்கும், கொங்குநாட்டில் ஏழும், மலைநாட்டில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவற்றின் வேறாக, வட நாட்டில் ஐந்தும் துளுநாட்டில் ஒன்றும் அந்நாளில் சிறப்புற்ற கோயில்களாக இன்று நாம் காணக்கிடக்கின்றன. இக்கணக்கினை யெடுத்தற்கு இடமாகிய திருமுறைகளில் 250 வைப்புக் கோயில்கள் உள்ளன.

நடுநாடு என்றது பல்லவர்க்குப் பின் தோன்றி வல்லரசாய் மேம்பட்ட சோழர் காலத்தில் உண்டாகியது. இது பல்லவர் காலத்தில் திருமுனைப்பாடி நாடு என நிலவிற்று. இது, திருக்கோவலூரை மேற்கெல்லையாகக் கொண்டு தென்பெண்ணையாறு கடலொடு கலக்கும் துறைவரையில் அதன் இரு மருங்கும் நின்ற நாட்டுப் பகுதியைத் தன்கட் கொண்ட வளமிக்கதொரு சிறுநாடாகும்.

இக்காலத்தே நிலவிய திருமுறையாசிரியர்களான ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்ற மூவர்பாட்-