பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

299

C. K. சுப்பிரமணிய முதலியாரும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம் திருவாதவூரடிகள் காலமாம் என்றனர். K. A. நீலகண்டி சாத்திரியார் அடிகள் தேவார ஆசிரியர் மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்றார், மேனாட்டறிஞர்களான வில்சன் (Wilson) என்பாரும் G. U. போப் (G. U. Pope) பாதிரியாரும் அடிகள் காலம் கி. பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டாகலாம் என்று கூற. இன்னஸ் (Innes) என்பார், மாணிக்கவாசகர் சங்கரர் காலத்துக்குப் பின் அவரை அடுத்திருந் திருப்பாராதலால், அவர் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டாகலாம் என்று கூறுகின்றார். கூடி (Gudie) என்பவர், அடிகள் காலம், கி. பி. எட்டாம் நூற்றாண்டின் நடுவிற்கும் பத்தாம் நூற்றாண்டின் நடுவிற்கும் இடையேயுள்ள காலமாகலாம் என்றார். நெல்சன் (Nelson) என்பார் புத்தர் காலத்துக்கு 1360 ஆண்டுகட்குப் பின் சைவமுனிவர் ஒருவர் கி. பி. 819-ல் ஈழநாட்டுக்கு வந்து சிவநெறியைக் கற்பித்துப் பலரைச் சைவராக்கினர் என்றும், அவர் மாணிக்கவாசகராக இருக்கலாம் என்றும், எனவே அவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமாம் என்றும் கூறுகின்றார்.[1] T. A. கோபிநாத ராவ் அவர்கள், அடிகள் காலம் பத்தாம். நூற்றாண்டாகும் என்றும், டாக்டர் ரோஸ்டு (Dr. Rost) என்பார்[2] பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றண்டில் இருந்தவர் என்பர். ஆயினும், M. சீனிவாச அய்யங்காரும்[3] S. அனவரத விநாயகம் பிள்ளையவர்களும்[4] அடிகள் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தார் என்று கூறுகின்றனர்.

இவ்வண்ணம் கூறப்படும் காலங்களுள் ஒன்பதாம் நூற்றாண்டென்று கூறுவோர் முடிபே பின்னர் நிகழ்ந்த


  1. Madura Dt. Manual. p. 147.
  2. Encyclopaedica-Brittanica-Tamils.
  3. Tamil Studies. p. 54.
  4. தமிழ்ப்பெருமக்கள் வரலாறு. பக். 68.