பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

சைவ இலக்கிய வரலாறு

மடநல்லாள் என வாதவூரடிகளால் குறிக்கப்படுபவர். இடவைப் பகுதியில் குறுநில மன்னனாய் இருந்த சோழ வேந்தன் மகளாய் முதல் வரகுணனுக்கு மனைவியாய் இருந்து சிவப்பேறுப் பெற்றவர் என்பது தெளிவாகிறது.

இனி, திரு. T. P. பழனியப்ப பிள்ளையவர்கள், இறைவன் குதிரைச் சேவகனாகி வந்த செய்தியும், பரிகளை நரிகளாக்கினான் என்ற செய்தியும், மண் சுமந்து மொத்துண்டு பொன்மேனி புண்சுமந்த செய்தியும் அடிகள் காலத்துக்கு முன்பே வேறு வேறு காலத்தில் நிகழ்ந்தவை என்றும், குதிரை மேல் ஊர்ந்து வந்தது தடாதகையாரை மணத்தற்கு வந்த காலத்துச் செய்தி என்றும் கூறுகின்றார்.[1] இது திருவிளையாடற் புராணங்கள் கூறிவரும் செய்திகட்கு மாறாய்ப் புதுவதாய் இருத்தலின், அறிஞர்கள் நன்கு ஆராயத் தக்கது.

கல்லாடம் என்னும் பழைய தமிழ் நூல் முப்பத்திரண்டு திருவிளையாடல்களை வரைந்து மேற்கொண்டு, அவை, இன்னார் பொருட்டுச் செய்யப்பட்டன என்று கூறுகிறது; அத்தகைய நூல், நரியைப் பரியாக்கிய திருவிளையாடல், இன்னார் பொருட்டு நிகழ்ந்தது எனக் கூறுகின்றிலது ; முதியோள் பொருட்டு இறைவன் கூலியாளாக வந்து அடிபட்டதைக் கூறும் இக்கல்லாடம்[2] அது திருவாதவூரடிகள் பொருட்டு நிகழ்ந்ததெனக் கூறவில்லை; இவ்வகையால் நோக்குமிடத்து இந் நிகழ்ச்சிகளெல்லாம் திருவாதவூரடிகள் காலத்துக்கு நெடுங்காலத்துக்கு முன்பே நிகழ்ந்தனவாம் என்று தெரிகிறது என திரு. T. P. பிள்ளையவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறு தாம் கருதுவது போலவே, திரு. S. வையாபுரிப் பிள்ளையும் கருதுவதாக அவரது கட்டுரையொன்று[3] கூறுகிறது. திருவாதவூரடிகள் தம்பொருட்டு இறைவனால் நரிகள் பரியாக்கப் பெற்றன எனவும், மண்


  1. Journal of the Sri Venkateswara Oriental Research Institute. Vol. IV. p.177-9.
  2. கல்லாடம். “கருங்குடிற் செவ்வாய்” (48).
  3. கலையகள். பொங்கல் மலர். 1942