பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{326|சைவ இலக்கியவரலாறு}<

 யார்களில் ஏனைத் திரு ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் முதலியோர்களைப் போலச் சிவபெருமான் திரிபுரம் எரித் ததும், தக்கன் வேள்வியைத் தகர்த்ததும், திருமாலும் பிர மனும் அடிமுடி தேடியதுமாகிய வரலாறுகள் பொது ' வாகக் கூறப்படுவதோடு சிறப்புடைய வரலாறுகள் பல காணப்படுகின்றன. அவற்றுள், இறைவன் மகேந்திரமலை யிலிருந்து ஆகமம் சொன்னது, கல்லாடத்துக் கலந்து இனிதிருந்தது, பஞ்சப்பள்ளியில் பான்மொழியோடு அருள் செய்தது, அருச்சுனன் பொருட்டுக் கிராத வேடம் பூண்டது, நந்தம்பாடியில் ஆசிரியனாய் வந்தது, வேலம் புத்துாரில் விட்டேறு (வேற்படை) அருளியது, சாந்தம் புத்துார் வேடனொருவனுக்குத் தருப்பணத்திற் காட்சி தந்து அருளியது, அந்தணனாய்த் தோன்றி இந்திர சாலம் காட்டி யது, திருப்பூவணத்தில் சித்தராய்த் தோன்றியது, திரு வாதவூரில் சிலம்பொலி காட்டியது, பூவலம் என்னுமிடத் தில் பாவநாசம் செய்தது, பாண்டியனுக்குத் தண்ணீர்ப் பந்தர் வைத்தது, திருவெண்காட்டில் குருந்தின் கீழ்த் தோன்றியது, பட்டமங்கையில்,அட்டமாசித்தி யருளியது. வேட்டுவனாய்க் காட்டில் கரந்தது, ஒரியூரில் பாலகனானது, தேவூர்த் தீவில் உருக்கொண்டு நின்றது. திருவாரூரில் ஞானம் பெற்றது, இடைமருதூரில் பாதம் வைத்தது, ஏகம்பத்தில் அம்மைக்கு இடப்பாகம் தந்தது, சந்திர தீபத்துச் சாத்திரனாகியது, பாலையூரில் சுந்தரனானது, இடவை நல்லாட்கும் இலங்கை வண்டோதரிக்கும் இறைவன் அருள் செய்தது, பாண்டூர், திருவாஞ்சியம், கடம்பூர், ஈங்கோய் மலை, ஐயாறு, துருத்தி, திருப்பனையூர், கழுமலம், கழுக்குன்று, புறம்பயம், குற்றாலம் முதலிய திருப்பதிகளின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் திருவாதவூரடிகள் குறித்தருளுகின்றார், குதிரைச் சேவகனாகியது முதலிய நிகழ்ச்சிகளை அடிகள் குறிக்கும் திறத்தை முன்னர்க் கூறினாம். திருத்தொண்டத் தொகையிற் காணப்படும் சான்றோர்களுள் கண்ணப்பர், சண்டேசுரர் என்போரே அடிகளால் பாராட் டப்பெறுகின்றனர்.